india
சனிக்கிழமை வந்தாலே…. உ.பி இளைஞரின் விநோத பிரச்னையால் அதிர்ந்த அதிகாரிகள்!
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விகாஸ் துபே என்கிற இளைஞரின் விநோதமான பிரச்னையைக் கேட்ட அரசு அதிகாரிகள் அதிர்ந்துபோயுள்ளனர்.
உ.பியின் பதேஃபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதான விகாஸ் துபே. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர், கடந்த 40 நாட்களில் தன்னை 7 முறை பாம்பு கடித்துவிட்டதாகவும், அதிலிருந்து குணமாக அதிக அளவில் பணம் செலவழித்துவிட்டதாகவும் அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கிறார்.
இதனால், தாம் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும் சொல்லி பொருளாதாரரீதியிலான உதவியை அரசிடம் எதிர்ப்பார்ப்பதாக கோரிக்கை வைத்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட மருத்துவ தலைமை அதிகாரி ராஜீவ் நயான் கிரி, `பாதிக்கப்பட்ட நபர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தனது நிலையை விளக்கி கதறி அழுதார். விசாரித்ததில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அவரை பாம்பு கடித்திருப்பதாகச் சொல்கிறார்.
அதெப்படி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தவறாமல் ஒருவரை பாம்பு கடிக்கும். இதுவரை 7 முறை பாம்பு கடித்துள்ளதாகவும், ஒவ்வொரு முறையும் அதே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும், ஒருநாள் சிகிச்சையில் உடல் நலம் தேறியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இது விநோதமாக இருக்கிறது. இனிமேல் பாம்பு கடித்தால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்லும்படி அவரை அறிவுறுத்தியிருக்கிறோம். அவருக்குத் தேவையான உதவிகளை அரசு செய்யும். விநோதமான இந்தப் பிரச்னை குறித்து விசாரிக்க 3 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்திருக்கிறோம். விசாரணை முடிவில் என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்கிறேன்’ என்று கூறினார்.