உலகப் பொருளாதார வரைபடத்தில் இந்தியாவை ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாற்றும் வகையில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) வரும் ஜனவரி 27-ஆம் தேதி கையெழுத்தாகிறது. பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்த பேச்சுவார்த்தை, தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உற்று நோக்க வைத்துள்ளது.
உலக மக்கள்தொகையில் 25% பிரதிநிதித்துவம்!
இந்த ஒப்பந்தம் வெறும் இரண்டு தரப்புகளுக்கு இடையிலான வர்த்தகம் மட்டுமல்ல, இது உலக மக்கள்தொகையில் சுமார் 25 சதவீதத்தை ஒன்றிணைக்கும் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமைப்பாக அமையும். இதன் மூலம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, தோல் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் ஐடி சேவைகளுக்கு ஐரோப்பிய சந்தையில் வரி விலக்கு அல்லது குறைந்த வரி விகிதம் கிடைக்கும்.
விவசாயிகளுக்குப் பாதுகாப்பு!
இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இதில் விவசாயப் பொருட்கள் சேர்க்கப்படவில்லை என்பதுதான்.
ஐரோப்பிய நாடுகளின் மானிய விலை விவசாயப் பொருட்கள் இந்தியச் சந்தைக்குள் நுழைந்தால், உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் நிலவியது.
இதைத் தீர்க்கும் விதமாக, விவசாயத் துறையை இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கி வைக்க இந்தியா மிகத் தெளிவாகக் காய்களை நகர்த்தியுள்ளது.
இதன் மூலம் இந்திய விவசாயிகளின் நலன் காக்கப்படுவதோடு, மற்ற தொழில் துறைகளில் வர்த்தகம் சூடுபிடிக்கும்.
சீனாவுக்கு செக்?
ஐரோப்பிய நாடுகள் தங்களின் வர்த்தகத் தேவைகளுக்கு சீனாவை மட்டுமே நம்பியிருக்காமல், மாற்று சக்தியாக இந்தியாவைப் பார்ப்பதையே இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்துகிறது. ஜனவரி 27-ல் கையெழுத்தாக உள்ள இந்த ஒப்பந்தம், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை உயர்த்துவதோடு, பல லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இது இந்தியாவின் பொருளாதார சுதந்திரத்திற்கான அடுத்த கட்டம்” என வர்த்தக நிபுணர்கள் இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டி வருகின்றனர்.