“உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்” என்ற பழமொழிக்கு ஏற்ப, இன்றைய காலகட்டத்தில் சுமார் 75 சதவீத மக்கள் தங்களின் உண்மையான உணர்வுகளை மறைத்துவிட்டு, வெளியே ஒரு போலி பிம்பத்தை (Fake Image) உருவாக்கி வாழ்ந்து வருவதாக ஒரு புதிய உளவியல் ஆய்வு எச்சரித்துள்ளது.
மற்றவர்களின் அங்கீகாரத்திற்காகவும், சமூக ஊடகங்களில் தன்னை ‘சிறந்தவராகக்’ காட்டிக் கொள்வதற்காகவும் மக்கள் மேற்கொள்ளும் இந்த முயற்சி, அவர்களின் உயிருக்கே உலைய வைக்கும் விபரீதத்தை ஏற்படுத்துவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
24/7 தற்காப்பு நிலையில் உடல் (Defense Mode):
நீங்கள் உண்மையான உங்களுக்கும், வெளியே காட்டிக் கொள்ளும் பிம்பத்திற்கும் இடையில் ஒரு முரண்பாட்டை உருவாக்கும்போது, உங்கள் மூளை அதை ஒரு ‘ஆபத்தாக’ (Threat) கருதுகிறது. இதனால் உங்கள் உடல் 24 மணிநேரமும் ஒரு ‘தற்காப்பு’ நிலையிலேயே (Defense Mechanism) இருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறது. எப்போது உங்கள் உண்மை முகம் வெளிப்பட்டு விடுமோ என்கிற பயம் ஆழ்மனதில் ஊடுருவி விடுவதால், உடல் எப்போதும் ‘அலர்ட்’ நிலையில் இருக்கிறது.
ஹார்மோன்களின் ‘தாக்குதல்’:
உடல் இந்தத் தற்காப்பு நிலையில் இருக்கும்போது, மூளையின் கட்டளைப்படி ‘கார்டிசோல்’ (Cortisol) போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாகச் சுரக்கின்றன.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பு:
கார்டிசோல் அளவு தொடர்ந்து அதிகமாக இருக்கும்போது, அது உடலில் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தி ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
மூளை பாதிப்பு:
இது மூளையின் நினைவாற்றல் மற்றும் நிதானமான முடிவெடுக்கும் திறனை (Decision Making) மெல்ல மெல்ல மழுங்கச் செய்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி காலி (Immunity Loss):
இந்த ஆய்வின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், போலி வாழ்க்கை வாழ்பவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிக வேகமாக வீழ்ச்சியடைகிறது. உடல் எப்போதும் மன அழுத்தத்தைச் சமாளிப்பதிலேயே தன் ஆற்றலைச் செலவிடுவதால், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களை எதிர்க்கும் திறன் உடலுக்கு இல்லாமல் போகிறது. இதனால் அடிக்கடி சளி, காய்ச்சல் முதல் தீவிரமான உடல் உபாதைகள் வரை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆய்வாளர்களின் எச்சரிக்கை:
“மற்றவர்களின் கைதட்டலுக்காக நீங்கள் அணியும் முகமூடி, உங்கள் ஆரோக்கியத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் குறைகளையும், இயலாமையையும் மற்றவர்களிடம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு வாழ்வதே உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியமானது” என உளவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தனிமனித சுதந்திரம் மற்றும் சுயமரியாதையுடன் கூடிய ‘உண்மையான வாழ்க்கை’ மட்டுமே கார்டிசோல் அளவைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை மீண்டும் சீரமைக்கும் என இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.