“மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் அல்ல, அது ஒரு சர்வதேச நகரம்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய கருத்து, மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஆதித்யா தாக்கரே, அண்ணாமலையை ஒரு ‘பூஜ்ஜியம்’ (Zero) எனச் சாடியுள்ளார்.
அண்ணாமலை கிளப்பிய சர்ச்சை:
மும்பையில் உள்ள தாராவி மற்றும் சியோன் கோலிவாடா பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “மும்பை என்பது வெறும் மகாராஷ்டிராவிற்குச் சொந்தமான நகரம் மட்டுமல்ல, அது ஒரு சர்வதேச நகரம். இதற்கு ‘ட்ரிபிள் என்ஜின்’ (Triple Engine) அரசாங்கம் தேவை. மும்பைக்கு பாஜகவைச் சேர்ந்த ஒரு மேயர் வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
மும்பை மக்களின் ‘மராத்தி’ அடையாளத்தை அண்ணாமலை சீண்டியதாகக் கருதி, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மற்றும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மான் சேனை ஆகிய கட்சிகள் கொதித்தெழுந்துள்ளன.
ஆதித்யா தாக்கரேவின் அதிரடிப் பதிலடி:
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்யா தாக்கரே, அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது,
“அண்ணாமலை என்பவர் பாஜகவில் கிட்டத்தட்ட ஒரு பூஜ்ஜியம் (Zero). தமிழக மக்கள் அவருக்குத் தேர்தலில் பெரிய முட்டையைத்தான் (Zero) பரிசாகக் கொடுத்தார்கள். தான் போட்டியிட்ட சொந்தத் தொகுதியிலேயே டெபாசிட் வாங்க முடியாதவர் அவர். அடுத்த பிரதமர் இவர்தான் என்று அப்போது பில்டப் கொடுத்தார்கள், ஆனால் நிலைமை என்னவென்று எல்லோருக்கும் தெரியும்.”
தொடர்ந்து பேசிய அவர், “மும்பையையும் மகாராஷ்டிராவையும் அவமதிக்க இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டை அதிவேகமாக முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார். ஆனால் இவர்கள் அங்கே எதையும் செய்ய முடியாமல், இங்கே வந்து மிரட்டுகிறார்கள். அண்ணாமலையின் கருத்தை மகாராஷ்டிரா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது,” என ஆவேசமாகத் தெரிவித்தார்.
தொடரும் ‘ரசமலாய்’ சர்ச்சை:
முன்னதாக, அண்ணாமலையை ‘ரசமலாய்’ என்று கிண்டல் செய்த ராஜ் தாக்கரேவுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, “ராஜ் தாக்கரேவும், ஆதித்யா தாக்கரேவும் என்னை மிரட்ட அவர்கள் யார்? நான் ஒரு விவசாயியின் மகன். என்னைக் கண்டு அவர்கள் பயப்படுவதால் தான் இப்படிப் பேசுகிறார்கள்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
மகாராஷ்டிராவில் மாநகராட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தலைவரை முன்வைத்து மராட்டிய அரசியல் கட்சிகள் ஒன்று திரண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.