கே.என்.நேரு மீதான வழக்கில் மர்மம்!.. அமலாக்கத்துறை ஆதாரத்தை புறக்கணிக்கிறதா தமிழக காவல்துறை?.. அண்ணாமலை கொதிப்பு

தி.மு.க. அரசின் மூத்த அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீதான ₹1,020 கோடி டெண்டர் முறைகேடு புகார் குறித்து, ஏன் இதுவரை மாநில காவல்துறையோ அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையோ வழக்குப்பதிவு செய்யவில்லை என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமலாக்கத்துறை (ED) ஏற்கெனவே ஆதாரங்களுடன் தமிழக டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ள நிலையிலும், வழக்கு பதியப்படாதது குறித்து அண்ணாமலை தனது சமூக ஊடகப் பக்கத்தில் கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு:

நகராட்சி நிர்வாகத் துறையில் டெண்டர் முறைகேடு மற்றும் பணியாளர் நியமன ஊழல் மூலம் ₹1,020 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பான ஆதாரங்கள் அடங்கிய 250 பக்கங்களுக்கும் மேலான அறிக்கையை அமலாக்கத்துறை தமிழக அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.

அண்ணாமலையின் கேள்வி:

இந்த “மலை போன்ற ஆதாரங்கள்” இருந்தும், ஆளும் கட்சி அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் தமிழக அரசு தாமதிப்பது ஏன்? என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

“ஊழல் நடப்பது பெரிய விஷயமல்ல, ஆனால் இந்த ஆதாரங்களைத் தமிழக அரசால் தவிர்க்க முடியாது. எனவே, அமைச்சர் கே.என்.நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் நேரு மறுப்பு :

அமைச்சர் கே.என்.நேருவோ, தனக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். எதிர்க்கட்சிகளால் தூண்டப்பட்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அமலாக்கத்துறை இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். ஆளும் கட்சி அமைச்சர் மீது மத்திய விசாரணை முகமை ஆதாரங்களைக் கொடுத்தும், மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Leave a Comment