அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல் சீனாவுக்கு எதிராக மிகத் தீவிரமான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். ஆனால், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான பிரிட்டன், சீனாவை நோக்கி வர்த்தக ரீதியாக நகர்வது டிரம்பிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் பிரதமரின் சீனப் பயணம்:
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கடந்த எட்டு ஆண்டுகளில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் முதல் பிரதமர் ஆவார். அவர் பெய்ஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்தித்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் விளைவாக, பிரிட்டிஷ் விஸ்கி மீதான வரிகளைச் சீனா பாதியாகக் குறைத்தது (10%-லிருந்து 5% ஆக), விசா இல்லாத பயணம் (Visa-free travel), மற்றும் எரிசக்தித் துறையில் புதிய முதலீடுகள் எனப் பல அதிரடி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
டிரம்பின் காரசாரமான விமர்சனம்:
வாஷிங்டனில் தனது மனைவி மெலனியா குறித்த ஆவணப் பட விழாவில் கலந்து கொண்ட டிரம்பிடம், பிரிட்டனின் இந்தச் செயல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர்,
“பிரிட்டன் சீனாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவது அவர்களுக்கு மிகவும் ஆபத்தானது. இது நல்ல முடிவல்ல” என எச்சரித்தார்.
மேலும் கனடா குறித்துப் பேசிய அவர், “கனடா ஏற்கனவே மிக மோசமாகச் செயல்பட்டு வருகிறது. சீனாவுடன் அவர்கள் டீலிங் போடுவது அதைவிட ஆபத்தானது. சீனா உங்களை முழுமையாக விழுங்கிவிடும்” எனப் புலம்பித் தீர்த்தார்.
கனடாவுக்கு 100% வரி எச்சரிக்கை:
கனடா பிரதமர் மார்க் கார்னியும் சீனாவுடன் நெருக்கம் காட்டி வருவதால், கனடா மீதும் டிரம்ப் கடும் அதிருப்தியில் உள்ளார். சீனப் பொருட்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கனடாவை ஒரு ‘கொல்லைப்புறமாக’ மாற்றினால், கனடா பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படும் என டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனின் பதில்:
டிரம்பின் எச்சரிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “நாங்கள் அமெரிக்காவுடனும் நெருக்கமாக இருப்போம், அதே சமயம் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சிக்குச் சீனாவைப் புறக்கணிக்க முடியாது” எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை அப்படியே பின்பற்றும் பிரிட்டன், இப்போது பொருளாதார நெருக்கடி காரணமாகச் சீனாவை நோக்கித் திரும்பியிருப்பது, நேட்டோ (NATO) நாடுகளுக்கிடையே ஒரு புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.