சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள செவ்னி கிராமத்தில், இயற்கை விதிகளையே மிஞ்சும் வகையில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. ஒரு குரங்கால் கிணற்றில் வீசப்பட்ட 20 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை, தான் அணிந்திருந்த ‘டையப்பர்’ உதவியால் உயிர் பிழைத்துள்ளது.
நிமிட நேரக் கொடூரம்:
கடந்த புதன்கிழமை, சுனிதா ரத்தோர் என்ற பெண் தனது 20 நாள் குழந்தையுடன் வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென ஒரு குரங்கு மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து, சுனிதாவின் மடியில் இருந்த குழந்தையைப் பறித்துக்கொண்டு ஓடியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கூச்சலிட்டபடி குரங்கைத் துரத்தினர். பயந்துபோன அந்த குரங்கு, குழந்தையை அங்கிருந்த ஒரு பாழ்ங்கிணற்றில் வீசிவிட்டுத் தப்பியோடியது.
உயிரைக் காத்த ‘லைஃப் ஜாக்கெட்’:
சுமார் 10 நிமிடங்கள் வரை குழந்தை கிணற்றுத் தண்ணீரில் இருந்தது. பொதுவாக பச்சிளம் குழந்தைகள் தண்ணீரில் விழுந்தால் உடனே மூழ்கிவிடும் அபாயம் உண்டு. ஆனால், அந்த குழந்தை அணிந்திருந்த டையப்பர் (Diaper) தண்ணீரை உறிஞ்சி, ஒரு ‘லைஃப் ஜாக்கெட்’ போலச் செயல்பட்டது. டையப்பருக்குள் தேங்கிய காற்றும், அதன் தன்மையும் குழந்தையைத் தண்ணீருக்கு மேலேயே மிதக்க வைத்தது. இதுதான் குழந்தை மூழ்காமல் இருக்க முக்கியக் காரணமாக அமைந்ததாக மருத்துவர்கள் ஆச்சரியத்துடன் தெரிவிக்கின்றனர்.
தேவதூதாய் வந்த நர்ஸ்:
கிராம மக்கள் உடனடியாக வாளியைப் பயன்படுத்தி குழந்தையை மீட்டு வெளியே எடுத்தனர். அப்போது குழந்தையின் மூச்சு நின்றிருந்தது. அதிர்ஷ்டவசமாக, அந்த ஊரில் நடந்த ஒரு விசேஷத்திற்காக ராஜேஸ்வரி ரத்தோர் என்ற செவிலியர் அங்கு வந்திருந்தார். அவர் உடனடியாக குழந்தைக்கு CPR (முதலுதவி சுவாசம்) அளித்தார். சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு, குழந்தை அழத் தொடங்கியது.
தற்போதைய நிலை:
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாகவும், அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
“கடவுளும், அந்த டையப்பரும் தான் என் மகளுக்கு மறுபிறவி கொடுத்துள்ளது” என குழந்தையின் தந்தை அரவிந்த் ரத்தோர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். அதே சமயம், கிராமப் பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருவது குறித்து பொதுமக்கள் கடும் அச்சம் தெரிவித்துள்ளனர்.