மதுரை மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திமுக அரசைக் கண்டித்து, வரும் டிசம்பர் 17-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 55 மாதங்களாக, மதுரை மாநகரில் அம்மா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்ததைத் தவிர வேறு எந்தப் புதிய திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் :
மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முக்கியமான திட்டமாகக் கருதப்படும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முன்மொழிவைக்கூட திமுக அரசு முழுமையாகச் சமர்ப்பிக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம், சாலைப் பராமரிப்பு மற்றும் அடிப்படை உட்கட்டமைப்புப் பணிகள் ஆகியவை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
பழைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர்:
கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை மட்டுமே திமுக அரசு, தங்களது சாதனையாகப் போலி விளம்பரம் செய்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் எங்கே? :
மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
நாள்: டிசம்பர் 17, 2025
இடம்: பழங்காநத்தம், ஜெயம் தியேட்டர் அருகில்
இந்த ஆர்ப்பாட்டம் மூலம், மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் தோல்விகளையும், மாநகர மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணாத திமுக அரசின் மெத்தனப் போக்கையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப் போவதாக எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டம், தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான அரசியல் மோதல்களை மேலும் தீவிரமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.