சென்னை: நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) வழங்குவதில் நிலவும் மர்மமான இழுபறி, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு போர்க்களமாக மாறியது. தயாரிப்பு நிறுவனம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் சென்சார் வாரியத்தின் செயல்பாடுகளைப் பலமாகக் கேள்வி எழுப்பியுள்ளன.
நாங்க சொன்னதை செஞ்சோம்.. ஆனா?
தலைமை நீதிபதி அமர்வில் இன்று நடைபெற்ற விசாரணையில், பட தயாரிப்பு நிறுவனம் (KVN Productions) சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மிகவும் உணர்ச்சிகரமாகத் தனது வாதத்தை முன்வைத்தார்.
“தணிக்கை வாரியம் எந்தெந்தக் காட்சிகளை மாற்றச் சொன்னார்களோ, எவற்றை நீக்கச் சொன்னார்களோ, அவை அனைத்தையும் நாங்கள் செய்தோம். ஆனால், இப்போது அதே நீக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் ஒரு புகாராகக் கூறிச் சான்றிதழ் வழங்க மறுக்கிறார்கள். இது என்னங்க நியாயம்? அவர்கள் சொன்னதைச் செய்தும் இப்படி முரண்டு பிடிப்பது ஏன்?” என்று தனது குமுறலைத் தெரிவித்தார்.
எந்தக் காட்சியை நீக்கினோம்?
படக்குழுத் தரப்பு கூறுகையில், “மத உணர்வுகள் மற்றும் ராணுவம் தொடர்பான சில காட்சிகளில் திருத்தம் கேட்டார்கள். நாங்கள் அதனைச் சரிசெய்து மறுசமர்ப்பிப்பு செய்தோம். ஆனால், ஏற்கனவே ‘ரிஜெக்ட்’ செய்யப்பட்ட அதே பழைய வெர்ஷனை (Version) வைத்துக் கொண்டு, இப்போது வரை காலதாமதம் செய்வது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டது” எனத் தயாரிப்பு தரப்பு வாதிட்டது.
சென்சார் போர்டு சொன்ன ’72 நிமிட’ விளக்கம்:
மறுபுறம், தணிக்கை வாரியம் தனது தரப்பு வாதத்தில், “படம் 72 நிமிடங்களுக்கு மேல் நீளம் கொண்டதாக இருப்பதால், சான்றிதழ் வழங்கும் அதிகாரம் தணிக்கை வாரியத் தலைவரிடமே உள்ளது. அவர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை,” என்று கால அவகாசம் கோரியது.
500 கோடி பட்ஜெட்.. ரசிகர்களின் ஏமாற்றம்:
சுமார் 500 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், கடந்த ஜனவரி 9-ம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால், சென்சார் சிக்கலால் பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனது. “படம் ஒரு அழுகக்கூடிய பொருள் (Perishable item). இப்படித் தாமதம் செய்வது எங்களைப் பொருளாதார ரீதியாக அழிக்கும் செயல்” என்று தயாரிப்பு தரப்பு வேதனை தெரிவித்தது.
தற்போது இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ‘ஜனநாயகன்’ படத்திற்கு எப்போது பச்சைக்கொடி காட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்தத் திரையுலகையும் பற்றிக்கொண்டுள்ளது.