ஆயுள் முழுவதும் ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழைத்த ரயில்வே ஊழியர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் கௌரவமான நினைவுப் பரிசில் “பித்தளை” வேலை காட்டியுள்ளது ரயில்வே நிர்வாகம்.
மோசடி அம்பலமானது எப்படி?
மேற்கு மத்திய ரயில்வேயில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு, அவர்களின் சேவையைப் பாராட்டி தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நாணயங்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. சமீபத்தில் வெள்ளி விலை உச்சத்தைத் தொட்ட நிலையில், போபாலைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர் தனது மகளின் திருமணச் செலவுக்காகவோ அல்லது பணத் தேவைக்காகவோ தன்னிடம் இருந்த நாணயத்தை விற்க நகைக்கடைக்குச் சென்றுள்ளார்.
அங்கு நாணயத்தைப் பரிசோதித்த நகைக்கடைக்காரர், “இது வெள்ளி நாணயமே இல்லை, வெறும் செப்பு (Copper) நாணயம்” என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து மற்ற ஊழியர்களும் தாங்கள் வாங்கிய நாணயங்களைச் சோதித்தபோது, அனைத்திலும் செப்பு மட்டுமே இருப்பது உறுதியானது.

ஆய்வக அறிக்கையின் பகீர் தகவல்கள்:
இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, நாணயங்கள் ஆய்வக சோதனைக்கு (NABL Lab) அனுப்பப்பட்டன. அதில், வெள்ளி அளவு வெறும் 0.23% மட்டுமே. (விதிமுறைப்படி 99.9% வெள்ளி இருக்க வேண்டும்). நாணயத்தின் பெரும்பகுதி செப்பு (Copper) மற்றும் பிற உலோகங்களால் ஆனது. வெளிப்பக்கத்தில் மட்டும் பெயரளவுக்குத் தங்க நிறம் பூசப்பட்டுள்ளது.
90 லட்சம் ரூபாய் ஊழல்?
இந்த நாணயங்களை வழங்க இந்தூரைச் சேர்ந்த M/s Viable Diamonds என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாணயத்தின் மதிப்பு சுமார் ₹2,500 என நிர்ணயிக்கப்பட்டு, மொத்தம் 3,640 நாணயங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 3,631 நாணயங்கள் ஊழியர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த மோசடியால் ரயில்வேக்கு சுமார் 90 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குப் பின்னால் பெரிய ஊழல் கும்பல் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
ஊழியர்களின் வேதனை:
“நாங்கள் இந்த நாணயத்தை ஒரு பரிசாகப் பார்க்கவில்லை, எங்களின் 40 கால உழைப்புக்குக் கிடைத்த கௌரவமாகக் கருதினோம். ஆனால், ரயில்வே நிர்வாகம் எங்களுக்குப் போலி நாணயத்தைக் கொடுத்து ஒட்டுமொத்த உழைப்பையும் கொச்சைப்படுத்திவிட்டது” என முன்னாள் ஊழியர் டி.கே.கௌதம் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலை:
இந்த மோசடி தொடர்பாக போபால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட இந்தூர் நிறுவனத்தைப் பிளாக்லிஸ்ட் (Blacklist) செய்துள்ள ரயில்வே நிர்வாகம், விஜிலென்ஸ் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. மேலும், லக்னோ போன்ற பிற ரயில்வே மண்டலங்களிலும் இதேபோன்ற புகார்கள் எழுந்துள்ளதால், நாடு தழுவிய அளவில் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.