முதலீட்டாளர்களே உஷார்!.. தங்கம் மற்றும் பங்குச்சந்தையில் ‘மெகா சரிவு’ ஏற்படுமா? BIS பகீர் எச்சரிக்கை!

உலக நாடுகளின் மத்திய வங்கிகளுக்கெல்லாம் தாய் வங்கியாகக் கருதப்படும் ‘சர்வதேச தீர்வுகளுக்கான வங்கி’ (Bank for International Settlements – BIS), தங்கம் மற்றும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு முன் எப்போதும் இல்லாத ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஒரே நேரத்தில் உருவான ‘இரட்டை குமிழி’ (Double Bubble):
பொதுவாக பங்குச்சந்தை வீழ்ச்சியடையும் போது தங்கம் விலை உயரும் அல்லது தங்கம் விலை குறையும் போது பங்குச்சந்தை உயரும். இதுவே முதலீட்டு உலகின் பாடமாக இருந்து வந்தது. ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் முதல்முறையாக, தற்பொழுது தங்கம் மற்றும் பங்குச்சந்தை பங்குகள் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் ‘பப்புள்’ (Bubble) நிலையை எட்டியுள்ளன. அதாவது, அவற்றின் உண்மையான மதிப்பை விட விலை மிகைப்படுத்தப்பட்டு உச்சத்தில் உள்ளது.

BIS அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
செயற்கை நுண்ணறிவு (AI) மீதான அதீத மோகத்தால் பங்குச்சந்தையும், புவிசார் அரசியல் பதற்றங்களால் தங்கம் விலையும் உயர்ந்துள்ளன. ஆனால் இந்த உயர்வு நிலைத்தன்மை அற்றது.

வெடிக்கக் காத்திருக்கும் குமிழி:
குறுகிய காலத்தில் இவ்வளவு வேகமான விலை உயர்வு ஏற்பட்டால், அது நிச்சயம் ஒரு பெரிய வீழ்ச்சியில் முடியும். இந்த ‘பப்புள்’ வெடித்தால், தங்கம் மற்றும் பங்குகளின் விலை கற்பனை செய்ய முடியாத அளவிற்குச் சரிய வாய்ப்புள்ளது.

தங்கம் என்பது வழக்கமாகப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும். ஆனால் தற்போது அது ஒரு ‘ஊக வணிக’ (Speculative) பொருளாக மாறிவிட்டது. இதனால் அதன் விலை அபாயகரமாக உயர்ந்துள்ளது.

சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா?
தற்போது சில்லறை முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டும் நோக்கில் பெருமளவில் தங்கம் மற்றும் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர். இதையே ‘எச்சரிக்கை மணி’யாக BIS பார்க்கிறது. நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறத் தொடங்கினால், இந்த விலை வீழ்ச்சி சில்லறை முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும்.

1980-களில் தங்கம் விலை சரிந்ததைப் போன்றோ அல்லது 2000-களில் ‘டாட்காம்’ (Dotcom bubble) வெடித்ததைப் போன்றோ ஒரு மிகப்பெரிய நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே, முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், போதிய ஆய்வுடனும் செயல்பட வேண்டும் என நிதி வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Leave a Comment