கோப்பை வென்ற பின் வெடித்த ஆதங்கம்.. இந்திய அணி தேர்வுக்கு எதிராக இஷன் கிஷன் ஓப்பன் டாக்!

இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட நாட்களாக வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் இஷன் கிஷன், சையத் முஷ்டாக் அலி கோப்பையை (SMAT 2025) வென்ற கையோடு தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். இறுதிப்போட்டியில் ஹரியானா அணிக்கு எதிராக சதம் விளாசிய அவர், “நான் இன்னும் என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்கும் விதமாகத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

வரலாற்று சாதனை ஜார்கண்ட் சாம்பியன்:

டிசம்பர் 18, 2025 அன்று புனேவில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், ஜார்கண்ட் மற்றும் ஹரியானா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜார்கண்ட் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. இது சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் பதிவான அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

கேப்டனின் ஆட்டம்:

தொடக்க வீரராகக் களமிறங்கிய கேப்டன் இஷன் கிஷன், வெறும் 49 பந்துகளில் 101 ரன்கள் விளாசி அசத்தினார். இதில் 8 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். இலக்கை நோக்கி ஆடிய ஹரியானா அணி 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஜார்கண்ட் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

வாய்ப்பு தராதது வருத்தமாக இருந்தது:

வெற்றிக்குப் பிறகு பேசிய இஷன் கிஷன், இந்திய அணியில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்தும், தேர்வுக்குழுவின் அணுகுமுறை குறித்தும் வெளிப்படையாகப் பேசினார்,

“நான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த போதும் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படாதது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஒருவேளை நான் ரன்கள் எடுப்பது மட்டும் போதாது, என்னுடைய அணியை வெற்றி பெற வைத்து கோப்பையை வென்று கொடுத்தால் தான் மீண்டும் வாய்ப்பு தருவார்களோ என்று எனக்குத் தோன்றியது. அதையே இப்போது செய்து காட்டியுள்ளேன்” என அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

தேர்வுக்குழுவிற்கு விடுத்த சவால்?:

இந்தத் தொடர் முழுவதும் இஷன் கிஷன் அபாரமான ஃபார்மில் இருந்தார். 10 இன்னிங்ஸ்களில் 517 ரன்கள் குவித்து, இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் அவர் உருவெடுத்துள்ளார். எதிர்பார்ப்புகளைச் சுமந்து கொண்டு நான் விளையாட விரும்பவில்லை. என்னுடைய கடமை ரன்கள் எடுப்பதும், அணியை வழிநடத்துவதுமே. இப்போது ஜார்கண்ட் அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளேன். மற்றவை தேர்வுக்குழுவின் கைகளில் உள்ளது” என அவர் தனது பேட்டியை முடித்தார்.

2026 டி20 உலகக்கோப்பைக்கான அணித் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இஷன் கிஷனின் இந்த அதிரடி ஆட்டம் மற்றும் ‘கேப்டன்சி’ தேர்வுக்குழுவிற்குப் பெரிய நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

Leave a Comment