இந்திய தண்டனைச் சட்டத்திற்கு (IPC) மாற்றாகக் கொண்டுவரப்பட்ட புதிய பாரதிய நியாய சமிதா (BNS) சட்டம், ஏற்கனவே ஜூலை 1, 2024 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துவிட்டது. இந்தக் கடுமையான சட்டம், குறிப்பாக குடும்ப வன்முறைகள் மற்றும் மனைவியைத் துன்புறுத்துதல் தொடர்பான விதிமுறைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
பிரிவு 85-இன் கீழ் அதிரடி மாற்றம் :
பாரதிய நியாய சமிதா சட்டத்தின் பிரிவு 85-இன் கீழ், மனைவிக்கு எதிராக கணவர் அல்லது அவரது உறவினர்கள் செய்யும் உடல் அல்லது மனரீதியான கொடுமைகள் (Cruelty) குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மதுபோதைக்கு மன்னிப்பு இல்லை:
மது அருந்திவிட்டு மனைவியைத் திட்டுவது, மிரட்டுவது, அவமதிப்பது, அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், “குடிபோதையில் செய்தேன், தெரியாமல் நடந்துவிட்டது” என்று இனி யாரும் நீதிமன்றத்தில் கூறி தப்பிக்க முடியாது. இத்தகைய செயல்களும் BNS பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படும்.
கடும் தண்டனை:
இந்தக் கொடுமைகள் நிரூபிக்கப்பட்டால், கணவர் அல்லது உறவினர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
முக்கியத்துவம் :
புதிய சட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்கொடுமைகள் தொடர்பான விதிகள் ஒரே பகுதியில் தெளிவாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. பிரிவு 85 ஆனது, IPC-இன் பழைய பிரிவான 498A-வை மாற்றியமைத்து மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மனைவிகள் மீதான மனரீதியான துன்புறுத்தல்கள் உட்பட குடும்ப வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.