இரவு 10 மணிக்கு மேல் நோ ரீல்ஸ், நோ சத்தம்! – மீறினால் ரயில்வே போலீஸ் ஆக்‌ஷன்!

ரயில் பயணங்களின் போது சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செல்போனில் சத்தமாக ரீல்ஸ் (Reels) பார்ப்பது, வீடியோக்கள் பார்ப்பது மற்றும் உரத்த குரலில் பேசுபவர்களுக்கு ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூக்கத்தை கெடுக்கும் ரீல்ஸ் – முற்றுப்புள்ளி வைத்த ரயில்வே :

தற்போது ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், ரயில்களில் பயணிப்பவர்கள் மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்காமல் செல்போனில் அதிக சத்தத்துடன் ரீல்ஸ்களைப் பார்த்து வருகின்றனர். இது சக பயணிகளுக்கு, குறிப்பாக இரவு நேரங்களில் தூக்கத்தைக் கெடுப்பதாகப் புகார்கள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து, ரயில்வே சட்டப்பிரிவு 145-ன் படி பயணிகளின் அமைதியை கெடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய விதிமுறைகள் என்ன?

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இந்த நேரத்தில் பயணிகள் யாரும் செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்கவோ, வீடியோக்கள் பார்க்கவோ கூடாது.

ஹெட்ஃபோன் கட்டாயம்:

வீடியோ அல்லது ஆடியோ கேட்க விரும்புபவர்கள் கட்டாயம் ஹெட்ஃபோன்களைப் (Headphones) பயன்படுத்த வேண்டும்.

உரத்த பேச்சுக்குத் தடை:

இரவு நேரங்களில் செல்போனில் பேசும்போது மற்றவர்களுக்கு இடையூறு தரும் வகையில் சத்தமாகப் பேசக்கூடாது.

விளக்குகள் அணைப்பு:

இரவு 10 மணிக்கு மேல் பெட்டியில் உள்ள பிரதான விளக்குகள் (Main Lights) அணைக்கப்பட வேண்டும்; நைட் லேம்ப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அபராதம் மற்றும் நடவடிக்கை :

இந்த விதிகளை மீறி மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் பயணிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.ஆரம்பத்தில் எச்சரிக்கை விடுக்கப்படும், தொடர்ந்து விதிகளை மீறினால் ரூ.500 முதல் ரூ.1,000 வரை அபராதம் வசூலிக்கப்படும். புகார்கள் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்காணிக்க ரயிலில் ரோந்து வரும் டிக்கெட் பரிசோதகர்கள் (TTE), ரயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசாருக்குத் தனி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால் இனி இரவு நேர ரயில் பயணங்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் அமையும் என பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Comment