நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் சுமார் 35 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தும், ஏன் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட அவரால் வெற்றி பெற முடியவில்லை என்பது குறித்து, அரசியல் விமர்சகர் ரங்கராஜ் பாண்டே முக்கியமான அரசியல் ஆய்வை முன்வைத்துள்ளார். இந்த வாக்குச் சிதறல் தமிழக அரசியல் களத்தில் யாருக்கு சாதகமாக அமையும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
வாக்குகளின் வலிமை எங்கே போனது?
ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய ரங்கராஜ் பாண்டே, சீமான் பெற்ற வாக்குகளைச் சுட்டிக்காட்டினார்.
“நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 35 லட்சம் வாக்குகள் வாங்கி இருக்கிறார். குறைந்தது 12 முதல் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் அவரிடம் இருக்க வேண்டும். ஆனால் ஏன் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட வரவில்லை என்று தெரியுமா?”
“இந்த 35 லட்சம் வாக்குகள் தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்கிறது. ஒரு தொகுதியில் சீமான் எதிர்பார்த்தது போல் வாக்கு அதிகமாக இருந்தால் அவர் ஜெயித்து விடுவார். ஆனால் அது நடக்காது.”
அவர் மேலும் கூறுகையில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இந்த 35 லட்சம் வாக்கு என்பது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கை என்றும், ஆனாலும் இந்த வாக்குகள் சிதறுவதால் தான் அவரால் இன்னும் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியவில்லை என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது என்று ஆணித்தரமாகக் கூறினார்.
விஜய்க்கு இது பாசிட்டிவ் அல்ல:
இதேவேளையில், அரசியலுக்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த ரங்கராஜ் பாண்டே, “இந்த வாக்குப் பங்கீட்டை வைத்துக்கொண்டு விஜய்க்குப் பாசிட்டிவ் என்று சொல்ல முடியாது” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் இந்த மாபெரும் வாக்குப் பலம், ஒரே இடத்தில் திரண்டு ஒருசில தொகுதிகளிலாவது வெற்றி என்ற இலக்கை அடையாதது, தமிழகத்தில் ஆளும் மற்றும் பிரதான எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மறைமுகச் சாதகமான அம்சமாக நீடிப்பதாக அரசியல் விமர்சகர்கள் இந்த விமர்சனத்தைப் பார்க்கின்றனர்.