ஆஸ்திரேலியா ஸ்டைல்!.. இந்தியாவிலும் சமூக வலைதளத் தடையா? உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு!

சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, ஆஸ்திரேலியாவைப் போல இந்தியாவிலும் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த எஸ். விஜயகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “இணையதளங்களில் ஆபாசப் படங்கள் மிக எளிதாகக் கிடைக்கின்றன. எந்தக் கட்டுப்பாடும் இன்றி சிறுவர்கள் இதைப் பார்ப்பதால் அவர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. எனவே, தேசிய மற்றும் மாநில சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.

ஆஸ்திரேலிய சட்டத்தை முன்மாதிரியாகக் காட்டய ஐகோர்ட்:
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், “ஆஸ்திரேலிய அரசு அண்மையில் 16 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துச் சட்டம் இயற்றியுள்ளது. அந்த சட்டத்தின் நுணுக்கங்களை ஆய்வு செய்து, இந்தியாவிலும் அதுபோன்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.”

ஆபாசப் படங்களுக்கு முட்டுக்கட்டை:
ஆபாசப் படங்கள் அடங்கிய இணையதள முகவரிகள் (URLs) தொடர்ந்து மாற்றப்பட்டு வருவதால் அவற்றை முடக்குவது சவாலாக உள்ளது என்பதை நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். இருப்பினும், இதைக் கட்டுப்படுத்த ‘பெற்றோர் கட்டுப்பாட்டுச் செயலிகளை’ (Parental Control Apps) பயன்படுத்துவது அவசியம் என்றும், இதற்கான விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

முக்கிய பரிந்துரைகள்:
16 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்களுக்குத் தனி இணையக் கட்டுப்பாட்டுச் சட்டம் தேவை. இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் (ISPs) சிறார்களுக்கான பாதுகாப்பான இணையச் சேவையை உறுதி செய்ய வேண்டும். அரசு தரப்பில் போதுமான விழிப்புணர்வு இல்லாததைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இனி வரும் காலங்களில் தீவிரப் பிரச்சாரங்களை முன்னெடுக்க உத்தரவிட்டனர். குழந்தைகளின் மனநலனைப் பாதிக்கும் இணையச் சீரழிவுகளைத் தடுக்க நீதிமன்றம் எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு, டிஜிட்டல் இந்தியா காலத்தில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Comment