கம்பீர் – கோட்ச் அல்ல!.. திறமை புறக்கணிப்பு குறித்து ராபின் உத்தப்பா சரமாரி தாக்குதல்..

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகக் கவுதம் கம்பீர் பொறுப்பேற்றதில் இருந்து அணியில் வீரர்களைத் தேர்வு செய்யும் முறையில் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் மனக்கசப்புகள் ஆதிக்கம் செலுத்துவதாக முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றில் பேசிய ராபின் உத்தப்பா, கவுதம் கம்பீரின் அணுகுமுறை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

உத்தப்பாவின் குற்றச்சாட்டு :

“என் கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி ஒரு ஹெட்கோட்சை நான் பார்த்ததே இல்லை,” என்று ராபின் உத்தப்பா தனது பேச்சைத் தொடங்கினார். அவர் மேலும் கூறியதாவது, “என்னுடைய முழு கிரிக்கெட் வாழ்க்கையிலும் ஒரு தலைமைப் பயிற்சியாளர் (Head Coach) தன் விருப்பப்படி வீரர்களைத் தேர்வு செய்வதை நான் பார்த்ததே இல்லை. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மற்றும் மனக்கசப்புகளை அடிப்படையாக வைத்து, உண்மையான திறமையை புறக்கணித்துவிட்டு அணியைத் தேர்வு செய்வது என்பது சரியானதல்ல.”

கவுதம் கம்பீரின் தலைமையின் கீழ் அணியில் சில அனுபவமிக்க வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், இளம் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகள் கூட முறையான அணுகுமுறையுடன் கையாளப்படவில்லை என்றும் உத்தப்பா மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.

சர்ச்சையும் பின்னணியும் :

சமீபகாலமாக, இந்திய அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருக்கும் கம்பீர், அணியின் ஆடும் லெவன் (Playing XI) மற்றும் வீரர்களின் பேட்டிங் வரிசையில் அடிக்கடி மாற்றங்களைச் செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சில போட்டிகளுக்குப் பிறகு, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற மூத்த வீரர்களின் பங்களிப்பை கம்பீர் முறையாகப் பாராட்டவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், முன்னாள் சக வீரரான ராபின் உத்தப்பாவின் இந்தக் கடுமையான குற்றச்சாட்டு, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காகத் திறமையான வீரர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா என்ற கேள்வியை இந்தக் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.

கம்பீரின் தலைமையின் கீழ் அணி தொடர்ச்சியாகச் சந்திக்கும் தோல்விகளுக்கும், இந்தத் தேர்வு முறைக் குழப்பமே காரணம் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment