ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த Sean Williams.. என்ன நடந்தது?

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டரான ஷான் வில்லியம்ஸ், தன் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

Sean Williams

ஜிம்பாப்வே அணி, பல்வேறு இடர்களைச் சந்தித்து சமீபத்தில்தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றத்தைச் சந்தித்து வருகிறது. உலகக் கோப்பை தொடர்களில் இந்தியாவைத் தோற்கடித்த வரலாறு கொண்ட அந்த அணி, சமீபகாலமாக சறுக்கலைச் சந்தித்து வந்தது. சமீபகாலமாகத் தான் அந்த அணி ஐசிசி தரவரிசையிலும் சரி, உலக அளவிலான ஐசிசி தொடர்களிலும் சரி முன்னேற்றம் கண்டு வருகிறது.

இந்தநிலையில்தான், அந்த அணியின் முன்னணி வீரரான ஷான் வில்லியம்ஸ், தான் போதைப் பழக்கத்துக்கு அடிமையானதாக கிரிக்கெட் வாரியம் முன்பாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

என்ன நடந்தது?

ஜிம்பாப்வே அணி, சமீபத்தில் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான ஆப்பிரிக்க தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடியது. இந்தத் தொடரில் அந்த அணி விளையாடிய பல்வேறு போட்டிகளில் இருந்து ஷான் வில்லியம்ஸ் திடீரென விலகினார். இதற்கு உரிய பதிலோ, சரியான காரணமோ அவர் தரப்பில் இருந்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கு அளிக்கப்படவில்லை.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து விசாரணையைத் தொடங்கியது ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம். அந்த விசாரணையில், தான் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதாக ஒப்புக்கொண்ட ஷான் வில்லியம்ஸ், போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வருதற்கான மறுவாழ்வு சிகிச்சையை எடுத்துக் கொள்ள இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதனால், ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் ஒரு வீரராக அவரின் கரியர் முடிவுக்கு வந்திருக்கிறது. அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகத் தெரிவித்திருக்கும் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம், அவர் இனிவரும் போட்டிகளில் விளையாடத் தேர்வு செய்யப்பட மாட்டார் என்றும் அறிவித்திருக்கிறது.

Leave a Comment