2026 தேர்தலுக்காக அதிமுக அறிவித்துள்ள ‘ஆண்களுக்கு இலவச பஸ்’ மற்றும் ‘₹2000 உதவித்தொகை’ போன்ற அதிரடி வாக்குறுதிகளைக் கேட்டதும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செம டென்ஷன் ஆகிவிட்டார். எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்புகளை “வெறும் ஏமாற்று வேலை” என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடனை யாரு அடைப்பா?
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தமிழ்நாடு ஏற்கனவே பல லட்சம் கோடி கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. வட்டி கட்டவே காசு இல்லாம தத்தளிக்கும் போது, மறுபடியும் மறுபடியும் எதெற்கெடுத்தாலும் இலவசம் என்று அறிவிப்பது நியாயமா? மக்களை முன்னேற்ற வழி தேடாமல், அவர்களை இலவசங்களுக்கு அடிமையாக்குவதுதான் உங்க அரசியலா?” என்று எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.
ஓட்டை பஸ்ஸை வச்சுக்கிட்டு ஓவர் சீனா?
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் இலவச பேருந்து பயண வாக்குறுதியைச் சல்லடை போட்டு துவைத்தார்.
“இலவசமாகப் பயணம் செய்ய முதல்ல உருப்படியா பஸ் இருக்கா? ஓடுற பஸ்ஸுல சக்கரம் கழண்டு விழுது, மழை பெய்ஞ்சா பஸ்ஸுக்குள்ள குடை பிடிச்சுட்டு போக வேண்டியிருக்கு. ஓட்டை உடைசல் பஸ்களை வச்சுக்கிட்டு, இதுல இலவசம்னு வேற அறிவிப்பு. இதை எப்படி ஒரு நல்ல வாக்குறுதினு சொல்ல முடியும்?” என்று ஆவேசப்பட்டார்.
தரமான சேவை முக்கியம்:
“மக்களுக்குத் தேவை பாதுகாப்பான, தரமான பேருந்து வசதிகள் தானேயொழிய, இலவசப் பயணம் கிடையாது” என்றார்.
பிச்சை போடாதீங்க, வேலை கொடுங்க!
மக்களுக்கு ₹2000 பிச்சை போடுவதை விட, அவர்களுக்குத் தரமான கல்வியும், கைநிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பும் கொடுப்பதே ஒரு சிறந்த அரசுக்கு அழகு என்று சீமான் தெரிவித்தார். “அதிமுக – திமுக ரெண்டு பேருமே மாத்தி மாத்தி இலவசத்தைக் கொடுத்து மக்களைச் சோம்பேறியாக்கப் பாக்குறாங்க” என்று அவர் சாடினார்.
எடப்பாடி பழனிசாமி ‘மாஸ்’ என்று நினைத்து வெளியிட்ட வாக்குறுதிகளை, சீமான் தனது பாணியில் ‘டேமேஜ்’ செய்திருப்பது இப்போது சோசியல் மீடியாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.