நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பொது நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர்களிடையே உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் குறித்துப் பேசுகையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உடனான தனது தனிப்பட்ட அனுபவம் ஒன்றை வெளியிட்டது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சமீபத்தில் ‘ஆமைக்கறி’ குறித்த இவரது கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது ‘மான் ஊறுகாய்’ குறித்த அவரது பேச்சு தமிழக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
உடற்பயிற்சி மற்றும் திடமான உடல் தேவை :
இளைஞர்களிடையே உடல் வலிமையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசிய சீமான், தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்துகொண்டார், “இன்றைய இளைஞர்கள் ஜிம்முக்குப் போங்கள், விளையாடுங்கள், ஓடுங்கள், உடம்பைத் திடமாக்குங்கள். நல்ல உணவு சாப்பிட்டு உடம்பைத் திடமாக வைக்க வேண்டும்.”
“என்னை, என் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் நான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது மான் ஊறுகாயைக் கொடுத்தார். நான் அப்போது கராத்தே தொடர் பயிற்சி செய்துகொண்டிருந்தேன். அதைச் சாப்பிட்டால் பிரஷர் ஏறிவிடும் என்பதால் ஊறுகாய் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.”
“உடனே எங்க அண்ணன் (பிரபாகரன்), ‘நீ சாப்பிடவே பயப்படுகிறாய். அப்புறம் நாளை பிரச்சனை வரும்போது சண்டை வந்தால் அதற்குக் பயப்பட மாட்டியா?’ என்று சொன்னவுடன், என்னுடைய தன்மானம் இடங்கொடுக்கவில்லை. உடனே ‘வைங்க, வைங்க’ என்று சொல்லி சாப்பிட்டேன்.”
சர்ச்சை ஏன்? :
மான் என்பது இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் பாதுகாக்கப்படும் விலங்கு ஆகும். அதை வேட்டையாடுவது அல்லது அதன் இறைச்சியைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். சீமான் இந்தச் சம்பவத்தை இலங்கையில் நடந்தது என்றும், அது விடுதலைப் போராட்டக் காலகட்டத்தைச் சார்ந்தது என்றும் விளக்கமளித்தாலும், ‘ஆமைக்கறி’ விவகாரத்தை அடுத்து இப்போது ‘மான் ஊறுகாய்’ குறித்து அவர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதத்தையும் விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.
இறுதியாக, இன்றைய இளைஞர்கள் போராட்டக் குணத்துடனும், திடமான உடலுடனும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்தச் சம்பவத்தைக் கூறியதாக சீமான் தனது உரையை முடித்தார்.