தமிழக அரசியலில் தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச வாக்குறுதிகளை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பாணியில் கிண்டல் செய்துள்ளார். “டிவி, லேப்டாப் கொடுத்தார்கள், இப்போது தம்பி பைக், கார் என்கிறார்.. நான் ஹெலிகாப்டரே தருகிறேன்” என அவர் பேசியது மேடையில் சிரிப்பலைகளையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வரும் சீமான், அண்மையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் திராவிடக் கட்சிகள் மற்றும் புதிய அரசியல் வரவுகளின் தேர்தல் வாக்குறுதிகளைக் கடுமையாகச் சாடினார்.
தம்பி ஒரு படி மேல போயிட்டார்:
மேடையில் பேசிய சீமான், “தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்தவர்கள் இலவசத் தொலைக்காட்சி, மிதிவண்டி, மடிக்கணினி, அரிசி என எல்லாவற்றையும் கொடுத்துவிட்டார்கள். இப்போது புதிதாக வந்திருக்கும் தம்பி (விஜய்) ஒரு படி மேலே போய், பைக், கார் என்றெல்லாம் சொல்லத் தொடங்கிவிட்டார். அவர்கள் கார் கொடுத்தால், நான் வீட்டுக்கொரு ஹெலிகாப்டர் தரப் போகிறேன்” என்று கிண்டலாகக் கூறினார்.
ஹெலிகாப்டர் ‘நச்’ காரணம்:
ஹெலிகாப்டர் தருவதாகக் கூறியதற்கு அவர் முன்வைத்த காரணம் தான் தற்போதைய ஹைலைட். “ஏன் ஹெலிகாப்டர் தருகிறேன் தெரியுமா? தமிழ்நாட்டில் சாலைகள் (Roads) எதுவுமே சரியில்லை. எங்கு பார்த்தாலும் பள்ளமும் மேடுமாக இருக்கிறது. ரோடு சரியில்லை என்றால் மக்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும்? அப்படியே ஹெலிகாப்டரில் பறந்து அவர்கள் இடத்திற்குப் போயிடலாம் அல்லவா? அதற்காகத்தான் இந்த ஏற்பாடு” என்று நக்கலாகத் தெரிவித்தார்.
இலவச அரசியலுக்குச் சாட்டையடி:
சீமானின் இந்தப் பேச்சு வெறும் நகைச்சுவைக்காக மட்டுமல்லாமல், தமிழகத்தில் நிலவும் ‘இலவசக் கலாச்சாரத்தை’ (Freebie Culture) நோக்கிய ஒரு சாட்டையடியாகப் பார்க்கப்படுகிறது. தரமான சாலைகள், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்காமல், மக்களை இலவசங்களைக் கொடுத்து ஏமாற்றுவதையே மற்ற கட்சிகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன என்பதை அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
சீமானின் இந்த ‘ஹெலிகாப்டர்’ பேச்சு தற்போது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களிலும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களிலும் தீயாய் பரவி வருகிறது. “அண்ணன் எப்போதுமே தக் லைஃப் தான்” என்று தம்பிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.