அண்ணாமலை காலை வெட்டி பாரு!.. ராஜ் தாக்கரேவுக்கு சீமான் விடுத்த ஓப்பன் சேலஞ்ச்!

மும்பைக்கு வந்தால் அண்ணாமலையின் கால்களை வெட்டுவேன் என்று மிரட்டல் விடுத்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அண்ணாமலை மீது கை வைப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கும் செயல்” என்று அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

மோதலின் பின்னணி:
மும்பை உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்காகச் சென்றிருந்த பாஜகவின் அண்ணாமலை, “மும்பை என்பது மராத்தியர்களின் நகரம் மட்டுமல்ல, அது ஒரு பன்னாட்டு நகரம் (International City)” என்று பேசினார். இது மராத்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இதற்குப் பதிலடி கொடுத்த ராஜ் தாக்கரே, அண்ணாமலையை ‘ரஸ்மலாய்’ என்று கிண்டல் செய்ததோடு, “அவர் மீண்டும் மும்பை பக்கம் வந்தால் கால்களை வெட்டுவோம்” என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியிருந்தார்.

அண்ணாமலைக்காகக் களமிறங்கிய சீமான்:
இந்த விவகாரம் குறித்துச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், வழக்கமான தனது பாணியில் அண்ணாமலைக்கு ஆதரவாகவும், மிரட்டல் விடுத்தவர்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்.

“தம்பி அண்ணாமலை மும்பையைப் பற்றிச் சொன்னது அவருடைய தனிப்பட்ட கருத்து. ஜனநாயக நாட்டில் ஒரு கருத்தைச் சொல்லவும், அதை மறுப்பதற்கும் எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், கால்களை வெட்டுவேன் என்று மிரட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது,” என்று சீமான் கூறினார்.

அண்ணாமலை தனி நபரல்ல… தமிழன்!
தொடர்ந்து பேசிய அவர், “ராஜ் தாக்கரேவின் இந்தப் பேச்சு அண்ணாமலை என்ற ஒரு தனிமனிதனை மட்டும் காயப்படுத்தவில்லை. அது ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தையே இழிவுபடுத்துவது போல இருக்கிறது. அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் ஒரு தமிழனை மிரட்டினால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். தம்பி அண்ணாமலைக்கு நாங்கள் அரணாக இருப்போம்” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

பரபரக்கும் மும்பை அரசியல்:
ஏற்கனவே ‘லுங்கி’ விவகாரத்தை வைத்துத் தமிழர்களுக்கும் மராத்தியர்களுக்கும் இடையே மோதலை உருவாக்க ராஜ் தாக்கரே முயன்று வரும் நிலையில், சீமானின் இந்த அதிரடி அறிக்கை மும்பை மற்றும் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment