விஜய்யின் ‘தவெக’ சின்னம்.. “நாடே வியக்கும்” .. செங்கோட்டையன் சவால்!

நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் தேர்தல் சின்னம் மிக விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், “சின்னம் வரும்போது நாடே வியக்கும்; விஜய்யை இனி வெல்வதற்கு தமிழகத்தில் எந்த அரசியல் அமைப்பாலும் முடியாது” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நேற்று (டிசம்பர் 7) தமது ஆதரவாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னம் குறித்து நம்பிக்கை தரும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

ரகசிய சின்னம் குறித்த செங்கோட்டையனின் தகவல்:

“வெகுவிரைவில் நமக்குச் சின்னம் கிடைக்கப் போகிறது. அது என்ன சின்னம் என்று எனக்குத் தெரியும். ஆனால், ஆணை வரும் வரையில் வெளியில் சொல்லக் கூடாது.”

“அந்தச் சின்னம் வரும்பொழுது, நாடே வியக்கப் போகிறது. விஜய்யை வெல்வதற்கு இனி தமிழகத்தில் இந்த அரசியல் அமைப்பாலும் முடியாது. அப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றி தமிழக வெற்றிக் கழகத்துக்குக் காத்துக் கொண்டிருக்கிறது” என்று செங்கோட்டையன் கூறினார்.

அதிமுகவில் அரை நூற்றாண்டு அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன், சமீபத்தில் விஜய்யின் கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது இந்தப் பேச்சு, தவெக-வின் தேர்தல் சின்னம் குறித்த எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது.

சின்னம் கோரி மனு:

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து, நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகத்தை’ கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். இதனையடுத்து, கட்சியின் சார்பில் ‘ஆட்டோ’, ‘கிரிக்கெட் பேட்’, ‘விசில்’, ‘வெற்றிக் கோப்பை’ உள்ளிட்ட சின்னங்களில் ஒன்றைப் பொதுச் சின்னமாகக் கேட்டு, கடந்த நவம்பர் மாதம் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment