தமிழ்த்தாய் வாழ்த்தை அரசியலுக்காக பயன்படுத்துவது திமுக.. ஆனால் தவெக அரசில் முதலில் பாடலாம் என்பதை கோர்ட் மூலமாகவே சொல்ல வைத்தது.. சொல் அல்ல செயல் மட்டும் தான் தவெக.. தமிழை வைத்து அரசியல் செய்தது போதும்.. 50 ஆண்டுகளாக தமிழ் பெயரை சொல்லி ஏமாற்றியதும் போதும்.. இனிமேல் ஆக்கபூர்வ நடவடிக்கை தான்.. அது தமிழாக இருந்தாலும், தமிழக மக்களாக இருந்தாலும் சரி…
பள்ளிகள் மற்றும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் பாடப்படுவதைத் தடுக்கும் எந்தவிதமான உத்தரவும் மத்திய அரசின் அறிவிப்பில் இல்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து எப்போது பாடப்பட வேண்டும் என்பது குறித்துத் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு மற்றும் அது தொடர்பான நடைமுறைகளை எதிர்த்து அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவது இடத்திற்குத் தள்ளுவது பொதுமக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும், பாரம்பரியமான மரபுகள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் அந்த மனுவில் வாதிடப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களும் வழக்கமாகத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவடைவது பாரம்பரியமான நடைமுறையாகும். ஆனால், மத்திய அரசின் அறிவிப்புகளால் இந்தப் பாரம்பரிய நடைமுறைக்குக் குந்தகம் விளைவிக்கப்படுவதாகக் கூறித் தொடரப்பட்ட இந்த வழக்கு பொதுமட்டத்தில் பெரும் கவனத்தைப் பெற்றது.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், கடந்த ஜூலை 9 ஆம் தேதி புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டதாகத் தெரிவித்தார். அந்த அறிவிப்பில் ‘வந்தே மாதரம்’ மற்றும் தேசிய கீதம் ஆகியவை எப்போது பாடப்பட வேண்டும் என்பது பற்றிக் கூறப்பட்டுள்ளதே தவிர, மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தை எங்கு பாட வேண்டும் என்றோ அல்லது அதைக் கடைசியாகத் தான் பாட வேண்டும் என்றோ எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று அவர் விளக்கமளித்தார்.
தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்துத் தெளிவுரை வழங்கியது. மாநிலப் பாடலைத்தான் கடைசியாகப் பாட வேண்டும் என்று எந்தவொரு உத்தரவும் மத்திய அரசால் பிறப்பிக்கப்படவில்லை என்றும், அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்தினை முதலில் பாடலாம் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சுதந்திர தின விழாவின் போது சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டு, அதனைத் தொடர்ந்து வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் பாடப்பட்ட முறையை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இந்தத் தெளிவுபடுத்தலின் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்தினை அரசு நிகழ்வுகளில் வழக்கம்போல முதலிடத்தில் பாடுவதில் எந்தத் தடையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.