“மனுஷன் கூட மாறிடுவான்.. ஆனா இந்த நாய்?” – மத்திய பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள பதோரா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம், இப்போது ஒட்டுமொத்த இந்தியாவையுமே கண்கலங்க வைத்துள்ளது. ஒரு வளர்ப்பு நாய் தன் எஜமானர் மீது வைத்திருக்கும் விசுவாசம், ‘777 சார்லி’ படத்தையே மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது.
நிழலாய் தொடர்ந்த பாசம்:
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் (40) என்பவர் கடந்த திங்கட்கிழமை திடீரென உயிரிழந்தார். அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்தபோது, அவரது வளர்ப்பு நாய் ‘ஷேரு’ ஒரு நிமிடம் கூட உடலை விட்டு நகரவில்லை. இரவெல்லாம் விடிய விடிய எஜமானரின் உடலருகிலேயே அமர்ந்து கண்ணீர் வடித்தது.
4 கிலோமீட்டர் ஓட்டம்!
மறுநாள் காலையில் ஜெகதீஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக டிராக்டரில் கொண்டு செல்லப்பட்டது. அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக, அந்த நாய் அந்த வாகனத்தின் பின்னாலேயே ஓட ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் தூரம் மூச்சிரைக்க ஓடி வந்து மருத்துவமனை வாசலில் தவம் கிடந்தது.
பசியோடு ஒரு தவம்:
ஜெகதீஷின் உடல் தகனம் செய்யப்பட்ட மயானத்திற்கே வந்த ஷேரு, இப்போது அங்கேயே தஞ்சமடைந்துள்ளது. மூன்று நாட்களாக அந்த நாய் ஒரு சொட்டு நீரோ, ஒரு பிடி உணவோ உட்கொள்ளவில்லை. எஜமானர் எரிக்கப்பட்ட அதே இடத்தில் அமர்ந்து, அவர் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் காத்துக்கொண்டிருக்கிறது.
அக்கம் பக்கத்தினர் எவ்வளவோ விரட்டியும், சாப்பாடு கொடுத்தும் அது அந்த இடத்தை விட்டு நகரவே மாட்டேன் என்கிறது.
மனைவி போனாள்.. நாய் போகவில்லை!
இந்தச் சம்பவம் குறித்து ஊர் மக்கள் பேசுகையில், “அவருடைய மனைவி கூட அவரை விட்டுச் சென்றுவிட்டார், ஆனால் இந்த நாய் அவரைப் பிரியவில்லை. விசுவாசத்திற்கு இதைவிட ஒரு பெரிய உதாரணத்தைச் சொல்ல முடியாது” என உருக்கமாகத் தெரிவிக்கின்றனர்.
மரணத்தையும் தாண்டிய இந்த நாயின் அன்பு, “உயிர் போனாலும் போகாது உன் மேல் வைத்த பாசம்” என்கிற வரிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.