10 ஆண்டுகள் கடந்தும் நீடிக்கும் மர்மம்.. காணாமல் போன மலேசிய விமானத்தை கண்டுபிடித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்..

உலகையே உலுக்கிய மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370 மாயமாகி சுமார் 10 ஆண்டுகள் ஆன நிலையில், அந்த விமானத்தைக் கண்டுபிடித்துத் தருவோருக்கு இந்திய மதிப்பில் 631 கோடி ரூபாய் (70 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசாக வழங்கப்படும் என்று மலேசிய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு, மார்ச் 8 ஆம் தேதி, மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு போயிங் 777 ரக விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அதில் மொத்தம் 239 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சீனப் பயணிகள் ஆவர். ஆனால், விமானம் தனது பயணப் பாதையிலிருந்து விலகி, இந்தியப் பெருங்கடலில் சென்று, ரேடாரில் இருந்து முழுமையாக மறைந்தது. இந்தச் சோக நிகழ்வு உலக விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகப்பெரிய மர்மமாகவே இன்றுவரை நீடிக்கிறது.

விமானத்தின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் முயற்சியாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன் இன்ஃபினிட்டி (Ocean Infinity) என்ற ஆழ்கடல் ஆய்வு நிறுவனம் மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட உள்ளது. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டில் தேடுதலில் ஈடுபட்ட அந்நிறுவனம், தற்போது வருகிற டிசம்பர் 30 ஆம் தேதி முதல் தொடர்ந்து 55 நாட்களுக்கு ஆழ்கடலில் அதிநவீன ரோபோடிக்ஸ் கருவிகளைக் கொண்டு தேடுதலைத் தொடங்கவுள்ளது.

மலேசிய அரசின் மாபெரும் பரிசு அறிவிப்பு :
விமானம் மாயமான சோகச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மலேசிய அரசாங்கம் இந்தத் தேடுதல் பணிக்கு ஆதரவளித்துள்ளது. ஓசன் இன்ஃபினிட்டி நிறுவனம் தேடுதலில் ஈடுபட்டு, விமானத்தின் பாகங்கள் அல்லது அதன் முக்கியத் தடயங்கள் எதேனும் கண்டறியப்பட்டால், அந்நிறுவனத்திற்கு 631 கோடி ரூபாய் (70 மில்லியன் டாலர்) ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று மலேசிய அரசு அறிவித்துள்ளது.

மாயமான விமானம் மற்றும் அதில் பயணித்த 239 பேரின் கதி என்ன ஆனது என்பதை அறியும் முயற்சி 10 ஆண்டுகள் கடந்தும் தொடர்வதால், உலகமே இந்த புதிய தேடுதல் பணியின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

Leave a Comment