இந்தியா சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் (0-2) படுதோல்வி அடைந்த இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அந்தத் தோல்விக்குப் பதிலடி கொடுக்க இன்று தீவிரமாகச் செயல்பட உள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (புதன்கிழமை) ராய்ப்பூரில் நடைபெறுகிறது.
முதல் வெற்றியில் இந்தியா முன்னிலை :
கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம், தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இன்று ராய்ப்பூரில் நடைபெறும் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றால், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று, டெஸ்ட் தொடர் தோல்வியின் கசப்பை ரசிகர்களுக்கு மறக்கடிக்கும். இதனால், இன்று நடைபெறும் ஆட்டம் தொடரைத் தீர்மானிக்கும் முக்கியப் போட்டியாக உருவெடுத்துள்ளது.
ரோஹித் – விராட் மீதான நம்பிக்கை:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் அணியில் மீண்டும் இணைந்துள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டனர். டெஸ்ட் தொடரின் ஏமாற்றத்திற்குப் பிறகு, இந்த இரண்டு அனுபவ நட்சத்திரங்களின் பேட்டிங் ஆதிக்கம், இந்திய அணிக்குத் தொடர் வெற்றியைத் தேடித் தரும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
இளம் வீரர்களுக்கு நெருக்கடி:
முதல் ஒருநாள் போட்டியில் சொதப்பிய இளம் வீரர்களான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (18 ரன்கள்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (8 ரன்கள்) ஆகியோர் இரண்டாவது போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.
முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, தொடரைச் சமன் செய்யும் தீவிர முனைப்புடன் களமிறங்கும். தொடக்க ஆட்டக்காரர்களான குயின்டன் டி காக் மற்றும் மார்க்ரம் ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அணிக்கு முக்கியமாக இருக்கும்.india vs south afrika