இன்டிகோ (Indigo) விமான சேவைகளின் வேலை நிறுத்தம் காரணமாக உள்நாட்டு விமானப் பயணக் கட்டணங்கள் வரலாறு காணாத வகையில், ₹70,000 வரை உயர்ந்த நிலையில், ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத் துறை பயணிகளின் நலன் கருதி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான டிக்கெட் கட்டணங்களுக்கு உச்சவரம்பு (Price Cap) நிர்ணயம் செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
தூரத்தின் அடிப்படையில் கட்டண உச்சவரம்பு:
உடனடியாக அமலுக்கு வரும் இந்த உச்சவரம்பு நிர்ணயம், விமானப் பயண தூரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வகுப்பு (Economy-class) பயணிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அறிவித்துள்ள கட்டண உச்சவரம்பு விவரம் பின்வருமாறு:
500 கிலோ மீட்டர் வரை: ₹7,500
500 முதல் 1000 கி.மீ. வரை: ₹12,000
1000 முதல் 1500 கி.மீ. வரை: ₹15,000
1500 கிலோ மீட்டருக்கு மேல்: ₹18,000
இந்த உச்சவரம்புக்குள் வரி மற்றும் சேவைக்கான கட்டணங்கள் அடங்கும். எனினும், விமானத்தின் பிசினஸ் கிளாஸ் (Business Class) பயணிகளுக்கு இந்தக் கட்டண வரம்பு பொருந்தாது என்றும் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
திடீரென ஏற்பட்ட விமான சேவை பாதிப்பால் அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இது விமானப் பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.