பொதுமக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த ‘பறக்கும் கார்’ என்ற தொழில்நுட்பம் இறுதியாக நிஜமாகியுள்ளது. ‘உலகின் முதல் உண்மையான பறக்கும் கார்’ என அறியப்படும் Alef Model A Ultralight 2 தற்போது வணிக ரீதியான உற்பத்திக்குத் தயாராகிவிட்டதாக அதன் தயாரிப்பு நிறுவனமான Alef Aeronautics அறிவித்துள்ளது.
சாதாரண கார் போலவே நான்கு சக்கரங்களுடன் தரையில் ஓட முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 350 கி.மீ தூரம் சாலையில் பயணிக்க முடியும்.
சிறகுகள் தேவையில்லை :
இதற்குப் பாரம்பரிய இறக்கைகள் (Wings) தேவையில்லை. இது ஹெலிகாப்டரைப் போல நிற்கும் இடத்திலிருந்தே (Vertical Take-off and Landing – VTOL) செங்குத்தாக மேல்நோக்கி எழும்பும் திறன் கொண்டது. பறக்கும்போது ஒரு முறை சார்ஜ் செய்தால் 170 கி.மீ வரை பயணிக்க முடியும்.
சாதாரண கார் ஓட்டும் அனுபவத்தையும், அதே நேரத்தில் போக்குவரத்து நெரிசலைத் தாண்டி வானில் பறக்கும் சுதந்திரத்தையும் அளிப்பதே இதன் முக்கிய நோக்கம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை மற்றும் சந்தைப்படுத்துதல் :
Alef Model A-ன் விலை சுமார் ரூ. 2.7 கோடி (அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் $300,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, இந்தக் கார் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு, நீண்ட கால சோதனைக்குப் பின்னரே இது பொதுச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று Alef Aeronautics நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்தச் சோதனை மூலம் அதன் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படும்.
பறக்கும் கார்களின் சகாப்தத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த கண்டுபிடிப்பு, எதிர்காலப் போக்குவரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.