மறுபடியும் முதல்ல இருந்தா? – கிரீன்லாந்தை வளைக்க ட்ரம்ப் போட்ட மாஸ்டர் பிளான்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியில் மீண்டும் தீவிரமடைந்துள்ளார். இது தொடர்பாக லூசியானா மாகாண ஆளுநர் ஜெஃப் லேண்ட்ரியை (Jeff Landry) கிரீன்லாந்திற்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதராக ட்ரம்ப் நியமித்துள்ளார்.

பாதுகாப்பு காரணமா? கனிம வளங்களா?
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,
“கிரீன்லாந்து எங்களுக்கு கனிம வளங்களுக்காகத் தேவைப்படவில்லை. எங்களிடம் ஏற்கனவே போதுமான அளவு எண்ணெய் மற்றும் எரிசக்தி வளங்கள் உள்ளன. ஆனால், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து மிக மிக அவசியம். அங்கு ரஷ்யா மற்றும் சீனாவின் கப்பல்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்ய அந்தப் பகுதியை நாங்கள் அடைந்தே தீருவோம்,” எனத் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து கடும் எதிர்ப்பு:
ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசுக்கு இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சென், “மற்றொரு நாட்டின் எல்லையை அத்துமீறி அபகரிக்க முடியாது. கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல,” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபெடெரிக் நீல்சன், “எங்கள் எதிர்காலத்தை நாங்களே தீர்மானிப்போம். அமெரிக்காவின் இத்தகைய போக்கை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்,” எனக் கூறியுள்ளார்.

உலக வரைபடத்தில் ஆர்க்டிக் பகுதியில் அமைந்துள்ள கிரீன்லாந்து, புவிசார் அரசியலில் மிக முக்கியமான இடமாகும். இந்தப் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதைத் தடுக்கவும், அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தவும் ட்ரம்ப் இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

தனித் தூதர் நியமனம் மற்றும் ட்ரம்ப்பின் தொடர் பேச்சுகள், அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய ராஜதந்திர மோதலை (Diplomatic Tension) உருவாக்கியுள்ளது.

Leave a Comment