புரட்சித் தலைவரின் விசுவாசி.. இப்போது தளபதியின் தொண்டனா?.. செங்கோட்டையனின் யு-டர்ன் பற்றி டிடிவி தினகரன் போட்ட ‘வெடி’!

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலந்தொட்டு அதிமுகவின் அசைக்க முடியாத தூணாக விளங்கிய கே.ஏ. செங்கோட்டையன், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது சமீபத்திய பேச்சு அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.

வழி தெரியாமல் நின்றபோது வழிகாட்டிய விஜய்!
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய செங்கோட்டையன், மிகவும் உணர்ச்சிவசப்பட்டுக் கண் கலங்கினார். அப்போது அவர் பேசியதாவது,

“ஒரு கட்டத்தில் அரசியல் பயணத்தில் எந்தத் திசை என்று தெரியாமல் தனிமைப்பட்டு நின்றேன். அந்த நேரத்தில் எனக்கு வழிகாட்டியாக வந்தவர் விஜய். அவர் காட்டிய பாதைதான் இன்று என்னை இங்கே நிறுத்தியுள்ளது. இது வெறும் உணர்ச்சிப் பேச்சு அல்ல, உறுதியான அரசியல் சத்தியம். என் உடலில் ஓடுகிற ஒவ்வொரு துளி ரத்தமும் விஜய்க்காகத்தான்!” என உருக்கமாகப் பேசினார். அதிமுகவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்த ஒரு மூத்த தலைவர், விஜய்க்காக இப்படிப் பேசியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிடிவி தினகரன் கொடுத்த ரியாக்ஷன்!
செங்கோட்டையனின் இந்த “ரத்த பாசம்” குறித்த பேச்சு பற்றி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்,

“அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட பிறகு, தனிமைப்பட்டதாக உணர்ந்த நேரத்தில் தவெக-வில் அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதை அவர் பெருமையாகப் பார்க்கிறார். நான் தூண்டிவிட்டுத்தான் அவர் அங்கு சென்றதாகச் சிலர் வதந்தி பரப்புகிறார்கள். ஓபிஎஸ் மற்றும் என்னுடன் அவர் பேச்சுவார்த்தையில் இருப்பதாகக் கூறுகிறார். ஆனால், அவர் தவெக-வில் இணைந்த பிறகு என்னை அழைக்கவில்லை.” என்று டிடிவி தினகரன் எதார்த்தமாகப் பதிலளித்தார். மேலும், செங்கோட்டையன் தவெக-விற்குச் சென்றது அவரது தனிப்பட்ட முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாறும் அரசியல் கணக்குகள்:
9 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த செங்கோட்டையன், அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்கவர். அவர் தற்போது விஜய்யின் தவெக-வில் ஐக்கியமாகி, “ரத்தமே விஜய்க்கு தான்” என முழங்குவது 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-விற்குப் பெரும் சவாலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment