மரண பயமில்லை.. ரஷ்யாவிற்கு சவால் விடும் உக்ரைன்.. ஜெலென்ஸ்கியின் ஆவேசப் பேச்சு!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் சுமார் நான்கு ஆண்டுகளை நெருங்கி வரும் நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பெயரைக் குறிப்பிடாமல், “அவர் அழிந்து போக வேண்டும்” என்பதுதான் ஒவ்வொரு உக்ரைனியரின் இதயத்துடிப்பாக இருக்கிறது என அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஒரே கனவு.. ஒரே விருப்பம்:
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு உக்ரைன் மக்களுக்கு காணொளி வாயிலாக உரையாற்றிய ஜெலென்ஸ்கி கூறியதாவது, “பழங்காலம் முதலே உக்ரைன் மக்கள் கிறிஸ்துமஸ் இரவில் சொர்க்கத்தின் கதவுகள் திறப்பதாக நம்புகின்றனர். அந்த நேரத்தில் நாம் கேட்கும் கனவுகள் நனவாகும் என்பது நம்பிக்கை. இன்று நம் அனைவரிடமும் ஒரே ஒரு கனவுதான் இருக்கிறது. நம் ஒவ்வொருவர் மனதிலும் ஓடும் அந்த ஒரே ஒரு விருப்பம் – ‘அவன் அழிந்து போக வேண்டும்’ என்பதுதான்.”

நேரடியாகப் பெயரைக் கூறவில்லை என்றாலும், ரஷ்ய அதிபர் புதினையே அவர் இவ்வாறு சாடியுள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இருப்பினும், கடவுளிடம் வேண்டும்போது அமைதியையே தாங்கள் முதன்மையாகக் கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குண்டுமழையிலும் குலையாத ஒற்றுமை:
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது கூட ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கடுமையான தாக்குதல்களை நடத்தியது. பல பகுதிகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கிய போதும், உக்ரைன் மக்களின் மன உறுதி குறையவில்லை என்று ஜெலென்ஸ்கி பெருமிதம் தெரிவித்தார்.

“ரஷ்யா நமது நகரங்களைக் குண்டுவீசித் தகர்க்கலாம், ஆனால் நமது இதயங்களில் உள்ள நம்பிக்கையையும், ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பையும், நமது ஒற்றுமையையும் அவர்களால் ஒருபோதும் ஆக்கிரமிக்க முடியாது” என்று அவர் உருக்கமாகப் பேசினார்.

தாக்குதலும்.. எதிர்பார்ப்பும் :
கடந்த சில தினங்களாக உக்ரைனின் எரிசக்தி நிலையங்களைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் பல அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். “இப்படிப்பட்ட தாக்குதலை நடத்துவோருக்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று ரஷ்யாவை அவர் விமர்சித்தார். அதே சமயம், அமெரிக்கா முன்மொழிந்துள்ள அமைதித் திட்டங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வருவதையும், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையையும் அவர் தனது உரையில் வெளிப்படுத்தினார்.

உக்ரைன் மக்கள் அனைவரும் நம்பிக்கையோடு ஒரு பெரிய குடும்பமாகத் திரண்டுள்ள இந்தக் கிறிஸ்துமஸ், வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

Leave a Comment