காசா போரை முடிவுக்குக் கொண்டு வந்து அங்கு அமைதியையும், மறுசீரமைப்பையும் உறுதி செய்ய ‘காசா அமைதி வாரியம்’ (Board of Peace) என்ற புதிய அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முறைப்படி அறிவித்துள்ளார். இந்த வாரியத்தின் தலைவராகத் தாமே செயல்படப் போவதாகவும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் ‘மாஸ்’ பிளான் :
கடந்த 2025 அக்டோபரில் டிரம்ப் முன்னெடுத்த 20 அம்ச அமைதித் திட்டத்தின் முதல் கட்டம் (போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் மீட்பு) வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, தற்போது இரண்டாம் கட்டம் (Phase 2) தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே இந்த ‘அமைதி வாரியம்’ உருவாக்கப்பட்டுள்ளது.
அதிபர் டிரம்ப் தனது அறிவிப்பில் குறிப்பிட்டதாவது,
“காசா அமைதி வாரியம் அமைக்கப்பட்டதை அறிவிப்பதில் நான் பெரும் பெருமை கொள்கிறேன். இது உலக வரலாற்றிலேயே மிகவும் மதிப்புமிக்க மற்றும் சக்திவாய்ந்த வாரியமாக இருக்கும். காசா மக்கள் அனுபவித்த துன்பங்கள் போதும். இனி அமைதி மட்டுமே அங்கு நிலவ வேண்டும்.”
ஹமாஸுக்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை:
அமைதி வாரியம் அமைக்கப்பட்ட கையோடு, ஹமாஸ் அமைப்பினருக்கு டிரம்ப் ஒரு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். ஹமாஸ் உடனடியாகத் தனது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் (Demilitarization). காசாவில் உள்ள அனைத்து போர் சுரங்கப் பாதைகளும் முழுமையாகத் தகர்க்கப்பட வேண்டும். ஹமாஸ் வசம் உள்ள கடைசி பிணைக்கைதியின் உடலையும் உடனடியாகத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளை ஹமாஸ் அமைதியாக ஏற்கலாம் அல்லது கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் வார்னிங் கொடுத்துள்ளார்.
யார் இந்த வாரியத்தில் இருப்பார்கள்?
இந்த வாரியம் வெறும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் மட்டும் இருக்காது. உலக நாடுகளின் தலைவர்கள் இதில் இடம்பெறுவார்கள்.
தலைவர்: டொனால்ட் டிரம்ப்.
உறுப்பினர்கள்: எகிப்து, துருக்கி, கத்தார் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் சில ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் (பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் உள்ளிட்டோர்) இதில் இணைய வாய்ப்புள்ளது.
காசாவின் அன்றாடப் பணிகளைக் கவனிக்க ‘பாலஸ்தீன தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு’ (Technocratic Government) அமைக்கப்பட்டுள்ளது. இது டிரம்ப் தலைமையிலான வாரியத்தின் மேற்பார்வையில் இயங்கும்.
இனி என்ன நடக்கும்?
காசாவில் போரினால் தரைமட்டமான கட்டிடங்களை அப்புறப்படுத்தி, அங்கு மீண்டும் புதிய நகரத்தை நிர்மாணிக்கும் பணிகளை இந்த வாரியம் ஒருங்கிணைக்கும். இதற்காக சுமார் 50 பில்லியன் டாலர் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாரியத்தின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டம் சுவிட்சர்லாந்தின் தாவோஸில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.