“நானும் ராணுவ தளபதியும் உலக நாடுகளிடம் பிச்சை எடுத்து வருகிறோம்” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பொது மேடையிலேயே உருக்கமாகப் பேசியுள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
நடந்தது என்ன?
பாகிஸ்தான் நாடு கடந்த சில ஆண்டுகளாகவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதலபாதாளத்திற்குச் சென்றுள்ள நிலையில், அன்றாடத் தேவைகளுக்கே உலக நாடுகளிடம் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் அந்த நாடு உள்ளது.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் நடந்த முக்கியக் கூட்டத்தில் பேசிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், நாட்டின் அவல நிலையைப் போட்டுடைத்தார்.
பிரதமரின் உருக்கமான பேச்சு:
அவர் பேசுகையில், “உண்மையைச் சொல்லப்போனால், நானும் ராணுவ தளபதி ஆசிம் முனீரும் உலக நாடுகளிடம் நிதி கேட்டு பிச்சை எடுக்கிறோம். இப்படி கையேந்தும்போது எங்களின் தலை தானாகவே வெட்கத்தில் குனிகிறது. கடன் கேட்பது எங்களின் சுயமரியாதையை பெரும் சுமையாக்குகிறது. ஆனால், நாட்டைப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற வேறு வழி தெரியாமல் இதையெல்லாம் செய்ய வேண்டியுள்ளது.” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் பொருளாதாரத்தை முட்டுக் கொடுத்துத் தூக்க சீனா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற நாடுகள் அவ்வப்போது கடன் உதவி வழங்கி வருகின்றன. ஆனால், ஒவ்வொரு முறையும் கடன் வாங்கச் செல்லும்போது அந்நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு பாகிஸ்தான் அடிபணிய வேண்டியுள்ளது.
இதைக் குறிப்பிட்ட ஷேபாஸ் ஷெரீப், “நமது பொருளாதார பலவீனம் காரணமாக, மற்ற நாடுகள் சொல்லும் பல விஷயங்களுக்கு எங்களால் ‘நோ’ (No) என்று சொல்ல முடிவதில்லை” என நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படுவதையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
வைரலாகும் வீடியோ:
பாகிஸ்தான் நாட்டின் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் பிரதமரும், நாட்டின் பலம் வாய்ந்த ராணுவத்தின் தளபதியும் இப்படி நாடுகளிடம் கையேந்தி நிற்பதாகப் பிரதமரே பேசியிருப்பது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மக்கள் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, “நமது நாட்டின் நிலைமை இவ்வளவு மோசமா?” என கவலையோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.