ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய சாதனம் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக நீண்ட காலமாகவே தகவல் வெளியாகி வருகிறது. எனினும், இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படாது என்றும், இது தொடர்பான திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் நிறுத்திவிட்டதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாவது வாடிக்கையான விஷயம் ஆகும்.
அந்த வரிசையில், ஆப்பிள் நிறுவனத்தின் முதல் தலைமுறை மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் இந்த ஆண்டின் மூன்று அல்லது நான்காவது காலாண்டு வாக்கில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் தலைமுறை மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான மிங்-சி கியோ வெளியிட்டுள்ள தகவல்களின் படி இந்த மடிக்கக்கூடிய ஐபோன் மாடலை ஃபாக்ஸ்கான் உற்பத்தி செய்யும் என்று தெரிவித்து இருக்கிறார். போல்டபில் ஐபோன் மாடலின் ஹார்டுவேர் விவரங்கள், ஹிஞ்ச் டிசைன் சார்ந்த பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சாதனத்திற்கான பெரும்பாலான பாகங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், போல்டபில் டிஸ்ப்ளே அதன் இறுதி நிலையை அடைந்துவிட்டது. சாம்சங் டிஸ்ப்ளே இந்த டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு வினியோகம் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்நிறுவனம் ஆண்டுக்கு 7 முதல் 8 மில்லியன் பேனல்களை உற்பத்தி செய்து கொடுக்கும்.
ஆப்பிள் நிறுவனம் 15 முதல் 20 மில்லியன் போல்டபில் ஐபோன்களுக்கான ஆர்டர் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை மூன்று ஆண்டு காலக்கட்டத்திற்கானது என்றும் கூறப்படுகிறது. 2026 ஆண்டில் மட்டும் 3 முதல் 5 மில்லியன் யூனிட்கள் வினியோகம் செய்யப்படலாம் என்றும் மீதமுள்ள யூனிட்கள் 2027 மற்றும் 2028 ஆண்டுகளில் வினியோகம் செய்யப்படலாம் என்று கியோ தெரிவித்துள்ளார்.
Image Credit: MacRumors