பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக யாத்ரா சிம் அறிமுகம் செய்துள்ளது. ரூ. 196 விலையில் கிடைக்கும் யாத்ரா சிம் 2025 அமர்நாத் யாத்திரையை ஒட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சிம் கார்டு அமர்நாத் யாத்திரை செல்வோரை குறிவைத்து பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. நாடு முழுக்க உறுதியான மொபைல் சிக்னல் கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது.
இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தனது சேவையை 4ஜி நெட்வொர்க்குகளுக்கு அப்கிரேடு செய்து வருகிறது. அந்த வகையில், புதிய யாத்ரா சிம் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் 2025 அமர்நாத் யாத்திரை செல்வோருக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிம் மூலம் யாத்திரை செல்வோர் தங்களது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைப்பில் இருக்க முடியும்.
பிஎஸ்என்எல் யாத்ரா சிம் பலன்கள்
இந்தியாவில் பிஎஸ்என்எல் யாத்ரா சிம் விலை ரூ. 196 ஆகும். இந்த சிம் 15 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது அமர்நாத் யாத்திரை பயண வழிகளில் உறுதியான நெட்வொர்க் கனெக்டிவிட்டி இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த சிம் கார்டை பயனர்கள் யாத்திரை செல்லும் போது லக்கன்பூர், பகவதி நகர், சந்தெர்கோட், பஹல்காம், பல்தால் மற்றும் பல இடங்களில் வாங்கிக் கொள்ளலாம்.
முன்னதாக 2021-ம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 197 விலையில் இதேபோன்ற சிம் கார்டு அறிமுகம் செய்தது. அப்போதும் இந்த சேவையின் வேலிடிட்டி 15 நாட்களாகவே இருந்தது. அமர்நாத் யாத்திரை செல்வோர் பிஎஸ்என்எல் சிம் பெறுவதன் மூலம் பயணத்தின் போதும் குடும்பத்தாருடன் இணைப்பில் இருக்க முடியும்.
பிஎஸ்என்எல் மட்டுமின்றி ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களும் கனெக்டிவிட்டி வழங்குவதை உறுதிப்படுத்துகின்றன. எனினும், பிஎஸ்என்எல் இதற்காகவே சிம் கார்டு ஒன்றை வழங்குவது குறிப்பிடத்தக்கது. ஆக்டிவ் சிம் கார்டு தவிர்த்து ரூ. 196 சலுகையில் வேறென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
2025 ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 3-ம் தேதி (ஜூலை) தொடங்கிவிட்டது. இந்த முறை அமர்நாத் யாத்திரை 38 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கடவுள் சிவபெருமானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.