அல்ட்ரா மாடலில் அது இல்லாம எப்படி? சாம்சங் எடுக்கும் திடுக் முடிவு

சாம்சங் நிறுவனம் தனது மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போனில் யாரும் எதிர்பார்க்க முடியாத மாற்றத்தை செய்ய இருக்கிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் தனது கேலக்ஸி S27 அல்ட்ரா ஸ்மார்ட்போன் தொடங்கி கேலக்ஸி S பென் வழங்குவதை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2027-ம் ஆண்டு முதல் சாம்சங் வெளியிடும் கேலக்ஸி S சீரிஸ் அல்ட்ரா மாடல் ஸ்மார்ட்போனில் எஸ் பென் இடம்பெறாது.

இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் எடுக்கும் இந்த முடிவு அதன் பிரியர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை கொடுக்கும். சீனாவை சேர்ந்த டிப்ஸ்டர் செட்சுனா டிஜிட்டல் வெளியிட்டுள்ள பதிவில் இந்த தகவல் இடம்பெற்று இருக்கிறது. S பென் சாதனத்தை நீக்குவதன் மூலம் இதர டிசைன் சார்ந்த விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக கேலக்ஸி S27 அல்ட்ரா மாடலில் சற்றே பெரிய பேட்டரி மற்றும் மேம்பட்ட கூலிங் வசதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் ஒட்டுமொத்தமாக ஸ்டைலஸ் சாதனத்திற்கு விடைகொடுக்கலாம் அல்லது கேலக்ஸி S21 அல்ட்ரா மாடலில் வழங்கப்பட்டதை போல் S பென் வைப்பதற்கென தனி எக்ஸ்டர்னல் கேஸ் வழங்கப்படலாம்.

ஸ்டைலஸ் சாதனத்தை கைவிடும் முடிவை எடுப்பது சாம்சங் நிறுவனத்திற்கு முதல் முறை அல்ல. டிப்ஸ்டரான பான்டா ஃபிளாஷ் ப்ரோ வெளியிட்ட தகவல்களில் கூட சாம்சங் தனது ஸ்டைலஸ் சாதனத்தை வைப்பதற்கு வேறொரு இடத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கேலக்ஸி S25 அல்ட்ரா மாடலில் வழங்கப்பட்ட S பென் சாதனத்தில் கூட ப்ளூடூத் ஏர் உள்பட சில அம்சங்கள் நீக்கப்பட்டது.

இதேபோல் விரைவில் வெளியாக இருக்கும் கேலக்ஸி Z ஃபோல்டு 7 மாடலில் கூட சாம்சங் தனது கேலக்ஸி S பென் சாதனத்தை வழங்காது என்றே கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் ஸ்மார்ட்போனின் அளவை முன்பை விட அதிக மெல்லியதாக மாற்ற முடியும்.

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் சாம்சங் தனது S பென் சாதனத்தை ஸ்மார்ட்போன்கள் தவிர்த்து கேலக்ஸி டேப்லெட் மாடல்களில் பயன்படுத்த வைக்கும் முயற்சியில் இருப்பதையே உணர்த்துகிறது. எதுவாயினும், கேலக்ஸி S26 அல்ட்ரா மாடலில் பில்ட்-இன் ஸ்டைலஸ் வழங்கப்படலாம்.

Leave a Comment