Grok AI: உங்க சாட் தகவல்கள் பாதுகாப்பா இருக்கா… எச்சரிக்கை மணியடித்த சம்பவம்!

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் சமூகம் மொத்தமும் தங்களின் பெரும்பாலான சந்தேகங்களை அவற்றிடமே கேட்டு தெளிவு பெறுகின்றனர். ஏற்கனவே டிஜிட்டல் பிரைவசி ஒன்று இல்லவே இல்லை என்று சைபர் செக்யூரிட்டி எக்ஸ்பர்ட்ஸ் கூறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த ஏஐ சாட்பாட்களின் வரவு தனியுரிமையை மேலும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

எலான் மஸ்குக்குச் சொந்தமாக எக்ஸ் (டிவிட்டர்) நிறுவனத்தின் குரோக் சாட்பாட், லட்சக்கணக்கான பயனாளார்களின் சாட் தகவல்களை இன்டர்நெட்டில் கசியவிட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது. கிட்டத்தட்ட, 3,70,000 பயனாளர்களின் தகவல்கள் கசிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கூகுள் சர்ச்சிலேயே இந்தத் தகவல்கள் காணப்படுவதாக பயனாளர்கள் சிலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

குரோக் ஏஐ சாட் பாட்டிடம் பயனாளர்கள் கேட்ட கேள்விகள், அதற்கு அந்த சாட்பாட் அளித்த பதில்கள் என முழு சாட் ஹிஸ்டரியும் கசிந்திருக்கிறது. இதுகுறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கும் தகவலில், குரோக் ஏஐ-யின் சாட்பாட் தளத்தில் இருக்கும் `ஷேர்’ ஆப்ஷன் மூலமாக ஒவ்வொரு சாட்டும் எல்லாரும் பார்க்கும் வகையில் தனித்தனி யூஆர்எல் இணைப்பாகக் கிடைப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சாதாரண தகவல்களாக இல்லாமல், வியாபாரரீதியிலான தகவல்கள், உடல்நிலை மற்றும் மனநிலை குறித்த மருத்துவத் தகவல்கள், பாஸ்வேர்டுகள் போன்றவை கூகுள் சர்ச் இன்ஜினில் இன்டெக்ஸாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அதில் ஒரு சாட்டில், கிளாஸ் ஏ போதைப்பொருள் தயாரிப்பது எப்படி என்று பயனாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு குரோக் ஏஐ விளக்கமாகப் பதிலளித்திருக்கிறது. மற்றொரு சாட்டில் எலான் மஸ்கை கொலை செய்வது பற்றியும் குரோக் ஏஐ விளக்கமளித்திருக்கிறது. பொதுவாக மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு தகவலையும் அளிக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை குரோக் மீறியிருப்பது இதன்மூலம் அம்பலமாகியிருக்கிறது. இந்த விவகாரம் டெக் உலகில் புதிய புயலைக் கிளப்பியிருக்கிறது.

Leave a Comment