144Hz ஸ்கிரீன், 12GB ரேம்… பட்ஜெட்டில் வெளியாகும் புது மோட்டோ போன்… எந்த மாடல் தெரியுமா?

இந்திய சந்தையில் பட்ஜெட் விலை பிரிவில் அதிக கவனம் செலுத்தும் நிறுவனங்களில் ஒன்று மோட்டோரோலா. என்ட்ரி லெவல் தொடங்கி ஃபிளாக்ஷிப் மாடல்கள் மற்றும் ப்ளிப் என பல பிரிவுகளில் மோட்டோ ஸ்மார்ட்போன்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த வரிசையில், மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை அடுத்து மோட்டோரோலா இந்தியா நிறுவனம் “All Eyes On You” என்ற டீசரை வெளியிட்டுள்ளது. டீசரில் புதிய ஸ்மார்ட்போன் நான்கு வித நிறங்களில் கிடைக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது. இத்துடன் இரட்டை கேமரா சென்சார்கள், வாட்டர் ப்ரூஃப் டிசைன் மற்றும் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தும் கடந்த மாதம் இணையத்தில் லீக் ஆன மோட்டோ G96 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களுடன் ஒற்றுப் போகிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட pOLED Curved பேனல் கொண்ட 10-பிட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன் மற்றும் 32MP செல்பி கேமரா வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்படுகிறது.

இத்துடன் 5000mAh பேட்டரி, 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்குவது உறுதியாகிவிட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போன் IP68 ரேட்டிங் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

விலையை பொருத்தவரை மோட்டோ G96 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ. 22,990 என நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இது ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலுக்கானது என்று கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படலாம்.

Leave a Comment