NSE: ஒரே நாளில் 40 கோடி முறை ஹேக்கிங் ஆபத்தை எதிர்க்கொண்ட தேசிய பங்குச் சந்தை – எப்போ தெரியுமா?

இந்திய தேசிய பங்குச் சந்தையான National Stock Exchange மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. நாட்டின் முக்கியமான பங்கு பரிவர்த்தனை மையமான தேசிய பங்குச் சந்தை சராசரியாக ஒரு நாளைக்கு 17 கோடி முறை ஹேக்கிங் ஆபத்தை எதிர்க்கொள்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆபரேஷன் சிந்தூர்

நாட்டின் எல்லையில் வரும் தாக்குதல்களுக்கு ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட படைகள் பதிலடி கொடுத்து பாதுகாத்து வருகின்றன. அதேபோல், இன்றைய வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இணையதளத்தில் இணைக்கப்பட்ட நெட்வொர்க்குகளின் மீது எதிரி நாடுகள் ஹேங்கிங் தாக்குதல்களை தொடுப்பதுண்டு.

அப்படி, அந்தத் தாக்குதல்கள் அனைத்தையும் முறியடித்து சைபர் வீரர்கள், இந்தியாவின் சைபர் நெட்வொர்க்குகளைப் பாதுகாத்து வருகிறார்கள். குறிப்பாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா எல்லை தாண்டி பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் தாக்கி அழித்தன.

அந்தத் தாக்குதல் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்ட தினத்தன்று மட்டும் தேசிய பங்குச் சந்தையின் நெட்வொர்க்கை ஹேக் செய்ய 40 கோடிக்கும் அதிகமான முறை ஹேக்கிங் முயற்சிகள் நடந்ததாக சைபர் வல்லுநர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்தத் தாக்குதல்களை தேசிய பங்குச் சந்தையின் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் வெற்றிகரமாக முறியடித்திருக்கிறார்கள். ஒருவேளை பங்குச் சந்தையின் நெட்வொர்க்குகள் தாக்குதலுக்கு உள்ளானால், பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களின் பணத்தின் பாதுகாப்பே கேள்விக்குறியாகியிருக்கும். இந்திய பொருளாதாரமே ஆட்டம் கண்டிருக்கக் கூடிய அளவில் எதிர்வினைகளை ஏற்படுத்தியிருக்கும் என்கிறார்கள்.

Leave a Comment