ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் நார்டு 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் 8-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஜூலை 8-ம் தேதி நடைபெறும் அறிமுக நிகழ்வில் ஒன்பிளஸ் நார்டு 5, நார்டு CE 5 மற்றும் பட்ஸ் 4 இயர்பட்ஸ் என ஒன்பிளஸ் நிறுவனம் மூன்று சாதங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது தொடர்பாக ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ டீசரையும் வெளியிட்டுள்ளது.
நார்டு சீரிஸில் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் சிப்செட் கொண்ட முதல் சாதனமாக ஒன்பிளஸ் நார்டு 5 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் LPDDR5X ரேம் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ டீசர்களில் ஒன்பிளஸ் நார்டு 5 மாடலில் டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் சமீபத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா எடிஷன் போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. புதிய நார்டு 5 ஸ்மார்ட்போன் பிஜிஎம்ஐ கேமினை 90fps-ல் சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கிறது. இதேபோல் கால் ஆஃப் டியூட்டி மொபைல் கேமினை 144fps-ல் சப்போர்ட் செய்யும். இத்துடன் 7300 mm² VC கூலிங் வசதி வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நார்டு CE5 ஸ்மார்ட்போனும் டூயல் கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இவைதவிர இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மர்மமாகவே வைக்கப்பட்டுள்ளன. எனினும், வரும் வாரங்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
இரு ஸ்மார்ட்போன்களுடன் ஒன்பிளஸ் அறிமுகம் செய்ய இருக்கும் ஒன்பிளஸ் பட்ஸ் 4 மாடல் டூயல் டிரைவர்ஸ், டூயல் DAC, ஹை-ரெஸ் LHDC 5.0, 3D ஸ்பேஷியல் ஆடியோ போன்ற வசதிகளுடன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் 47ms வரை அல்ட்ரா-லோ லேடன்சி வழங்குகிறது. இத்துடன் ஜென் கிரீன் மற்றும் ஸ்டார்ம் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
ஏற்கனவே இந்த இயர்பட்ஸ் சீன சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. அங்குள்ள மாடலில் அதிகபட்சம் 55db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் ரிடக்ஷன் வசதியும், மூன்று மைக்ரோபோன்களை கொண்ட ஏஐ கால் நாய்ஸ் ரிடக்ஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் நார்டு 5, நார்டு CE5 மாடல்கள் அமேசான் இந்தியா வலைதளம், ஒன்பிளஸ் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.