சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு அடுத்த வாரம், ஜூலை 9-ம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் வைத்து சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை மடிக்கக்கூடிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. கேலக்ஸி Z Fold 7 மற்றும் கேலக்ஸி Z Flip 7 மாடல்கள் தொடர்பான விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகியுள்ளன.
இதுதவிர கேலக்ஸி Z Flip 7 FE மாடல் பற்றிய தகவல்களும் அவ்வப்போது வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், தற்போது இணையத்தில் லீக் ஆகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி Z Flip 7 FE ஸ்மார்ட்போன் சற்றே குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முன் இந்த சாதனம் பற்றிய தகவல்கள் தவறுதலாக வெளியாகியுள்ளன.
ஸ்பிகென் என்ற பிரபல ஸ்மார்ட்போன் கேஸ் உற்பத்தியாளர் கேலக்ஸி Z Flip 7 மற்றும் கேலக்ஸி Z Flip 7 FE மாடல்களின் கேஸ் தங்களது வலைதளத்தில் கிடைக்கும் என்று தவறுதலாக பட்டியலிட்டது. எனினும், உடனடியாக அவை நீக்கப்பட்டு விட்டன. சிறிது நேரம் வலைதளத்தில் பட்டியலிடப்பட்ட போதிலும், இந்த லீக்கில் புகைப்படங்கள் அல்லது சாதனம் பற்றிய விவரங்கள் என எதுவும் கசியவில்லை.
இருந்த போதிலும், கூகுள் சர்ச் தளத்தில் இருப்பதால் சாம்சங் நிறுவனம் தனது வழக்கமான ப்ளிப் ஸ்மார்ட்போனுடன் சற்றே குறைந்த விலையில் ஃபேன் எடிஷன் மாடலையும் அறிமுகம் செய்வது கிட்ட்தட்ட உறுதியாகிவிட்டது. தவறுதலாக வெளியாகிவிட்ட போதிலும், இந்த தகவல் ஏற்கனவே இணையத்தில் கசிந்த விவரங்களுடன் ஒற்றுப் போகிறது. அதன்படி சாம்சங் தனது மடிக்கக்கூடிய சாதனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது.
புதிய கேலக்ஸி Z Flip 7 FE மாடல் கேலக்ஸி Z Flip 7 ஸ்மார்ட்போனின் சற்றே குறைந்த அம்சங்கள் கொண்ட வெர்ஷனாக இருக்கும். எனினும், இதில் தலைசிறந்த ஹார்டுவேர் அம்சங்கள் வழங்கப்படும் என்றும் இந்த மாடல் மோட்டோரோலா ரேசர் சீரிசுக்கு போட்டியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.