உலக பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா பெயரில் எலெக்ட்ரிக் கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் பெயரில் விண்வெளி பயண நிறுவனம், எக்ஸ் (முன்பு டுவிட்டர்) சமூக வலைதளம் என பலவகை வியாபாரங்களில் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி வருபவர் எலான் மஸ்க். அந்த வகையில், இவர் ஸ்டார்லிங்க் என்ற பெயரில் சாட்டிலைட் மூலம் இணைய வசதியை வழங்கும் நிறுவனத்தை உலகின் பல நாடுகளில் இயக்கி வருகிறார்.
அந்த வரிசையில், எலான் மஸ்க்-இன் ஸ்டார்லிங் விரைவில் இந்தியாவில் கால்பதிக்கும் என சமீப காலங்களில் அதிகளவு பேசப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய ஸ்கிந்தியா ஸ்டார்லிங்க் இந்திய வருகை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் சாட்டிலைட் மூலம் இணைய சேவைகளை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு விரைவில் உரிமம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த உரிமம் மத்திய தொலைதொடர்பு துறை வரும் நாட்களில் வழங்க இருக்கிறது. இதுவரை பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் சாட்டிலைட் மூலம் இணைய சேவை வழங்குவதற்கான உரிமம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்தியாவில் சாட்டிலைட் மூலம் இணைய சேவை வழங்கும் மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங்க் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இதுகுறித்து ஊடகத்தாரிடம் பேசிய மத்திய அமைச்சர் ஸ்கிந்தியா, “வரும் நாட்களில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்படும். இதற்கு பின் அரசாங்கம் ஸ்பெக்ட்ரத்தை வழங்கும். இதன் தொடர்ச்சியாக நாட்டில் சாட்டிலைட் டெலிகாம் சேவைகள் முழுவீச்சில் பயன்பாட்டிற்கு வந்துவிடும். இந்தியாவில் இதற்கான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்தார்.
சாட்டிலைட் மூலம் தகவல் தொடர்பு தற்போது இருப்பதைவிட பலமடங்கு அதிகப்படுத்த முடியும் என்று ஸ்கிந்தியா தெரிவித்தார். குறிப்பாக நீண்டதூர வயர்கள் மற்றும் டவர்களை நிறுவ முடியாத இடங்களில் தகவல் தொடர்பு வழங்க சாட்டிலைட் தகவல் பரிமாற்றம் உதவியாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.