இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியின் முக்கிய அம்சமான யுபிஐ பயன்பாடு பரவலாக உள்ளது. சமீபத்திய தரவுகளின்படி 49.1 கோடி மக்கள் யுபிஐ செயலி, வங்கிகளின் செயலி வழியாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பயன்பாடு, உலக அளவில் எட்டு நாடுகளில் இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த நாடுகளைப் பற்றிதான் பார்க்கப்போகிறோம்.
1.பூட்டான்
பீம் ஆப் வழியாக யுபிஐ பயன்பாட்டை முதன்முறையாக ஏற்றுக்கொண்ட வெளிநாடு பூட்டான். 2021-ம் ஆண்டு முதல் அந்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் நீங்கள் யுபிஐ ஆப் வழியாக பணம் செலுத்தலாம். இது பூட்டானின் கிராமப்புற வியாபாரிகள் மத்தியிலும் பரவலாகக் கவனம் பெற்று வருகிறது.
2. பிரான்ஸ்
2024 பிப்ரவரியில் ஈபிள் கோபுரத்தில் வைத்து நடந்த நிகழ்ச்சி மூலம் யுபிஐ பயன்பாட்டை ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அறிமுகப்படுத்தியது. ஆனாலும், குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே நீங்கள் யுபிஐ பயன்படுத்த முடியும்.
3. மொரீஷியஸ்
இந்தியாவின் யுபிஐ பயன்பாடு மொரீஷியஸில் கடந்த 2024 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா போலவே மொரீஷியஸிலும் யுபிஐ பயன்பாடு மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.
4. நேபாளம்
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் யுபிஐ பயன்பாடு, கடந்த 2024 பிப்ரவரியில் Fonepay மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது முதல் நேபாளம் செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகள் வாயிலாக டிஜிட்டல் பேமெண்ட் அதிகரித்து வருகிறது.
5. சிங்கப்பூர்
சிங்கப்பூரில் முதல்முறையாகக் கடந்த 2023-ம் ஆண்டு PayNow அமைப்பு வாயிலாக யுபிஐ பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது அந்நாட்டின் பல்வேறு பேமெண்ட் செயலிகளும் யுபிஐ பயன்பாட்டை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறது.
6. இலங்கை
இந்தியாவைப் போலவே இலங்கையிலும் தற்போது யுபிஐ பயன்பாடு பரவலாக இருக்கிறது. இதன்மூலம், இந்திய சுற்றுலாப் பயணிகள் தேவையில்லாத ஏடிஎம் கட்டணம் உள்ளிட்டவைகளை சேமிக்க முடியும்.
7. ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
இந்தியர்களின் மனதுக்கு நெருக்கமான ஷாப்பிங் தளமான ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் எளிதாக யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்ய முடியும். அதேபோல, அங்கிருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்ப அங்கு பணியாற்றும் இந்தியர்களும் யுபிஐ செயலிகளையே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
8. கத்தார்
இந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கும் நாடு தான் கத்தார். அங்குள்ள பெரிய கடைகளில் எல்லாம் இந்தியர்கள் எந்தவொரு பணபரிமாற்ற கட்டணமும் இன்றி யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.
இந்தப் பட்டியலில் எதிர்காலத்தில் இன்னும் பல நாடுகள் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுபிஐ செயலிகள் பயன்பாட்டில் உங்களுக்குப் பிடித்த அம்சம் எது என்பதை மறக்காம கமெண்ட்ல சொல்லிட்டுப் போங்க!