அன்புமணியை பிரித்தது நானா?.. பாமகவில் பூகம்பம்.. ஜி.கே. மணியின் வேதனைப் பேட்டி!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) உட்கட்சி விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மிகுந்த வேதனையுடன் பதிலளித்துள்ளார்.

‘துரோகி’ குற்றச்சாட்டுக்கு ஆவேசம் :

சமீபத்தில் அன்புமணி ராமதாஸ், தனது தந்தை டாக்டர் ராமதாஸுடன் இருக்கும் கட்சி நிர்வாகிகளை ‘துரோகிகள்’ என்று விமர்சித்ததாகவும், குறிப்பாக தனது அப்பா-பிள்ளை உறவை ஜி.கே. மணிதான் பிரித்துவிட்டார் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து பேசிய ஜி.கே. மணி, “என்னை பார்த்து, எங்கள் கட்சியில் உழைத்தவர்களைப் பார்த்து அன்புமணி ‘துரோகி’ என்கிறார். ஜி.கே. மணிதான் என்னையும் எங்க அப்பாவையும் பிரித்துவிட்டார் என்று சொல்கிறார். இதெல்லாம் எவ்வளவு வேதனையாக இருக்கும்?” என்று உருக்கத்துடன் கேள்வி எழுப்பினார்.

ராமதாஸின் தியாகமும், எனது உழைப்பும் : 

மேலும், பாமகவின் ஆரம்பகால வளர்ச்சிக்கு ராமதாஸ் பட்ட கஷ்டங்களைச் சுட்டிக்காட்டிய ஜி.கே. மணி, “35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ராமதாஸ். இன்றைக்கு பாமக வளர்ந்ததற்கு ராமதாஸ் தான் முக்கிய காரணம். ராமதாஸ் பாளையங்கோட்டை சிறைக்கு மட்டும்தான் செல்லவில்லை, மற்ற எல்லா சிறைக்கும் சென்றுவிட்டார்,” என்று நிறுவனர் ராமதாஸின் தியாகங்களை நினைவுகூர்ந்தார்.

தன்னுடைய 40 ஆண்டுகளுக்கும் மேலான கட்சிப் பணியைச் சுட்டிக்காட்டிய ஜி.கே. மணி, தனது உழைப்பையும் தியாகத்தையும் அன்புமணி துரோகம் என்று சொல்வது மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்தார்.

பாமகவுக்குள் நீடித்து வரும் தலைமைப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜி.கே. மணி வெளிப்படையாக அளித்த இந்தக் கருத்துக்கள் தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment