விஜய் பிரச்சாரத்துக்காக ஈரோடு பள்ளியில் தேர்வு ரத்து.. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!..

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், ஈரோட்டில் நாளை மறுநாள் (டிசம்பர் 18) மேற்கொள்ள உள்ள பிரச்சாரக் கூட்டத்திற்காக, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பள்ளியில் நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

18ஆம் தேதி நடக்க இருந்த தேர்வு ரத்து :

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள சரளை என்ற பகுதியில் டிசம்பர் 18ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளார். காலை 11 மணி முதல் 1 மணி வரை இந்தக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் விஜய்யின் வருகையால் அந்தப் பகுதியில் பல ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, சுங்கச்சாவடிக்கு அருகில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

விஜய் பிரச்சாரம் நடைபெற உள்ள டிசம்பர் 18ஆம் தேதி அன்று பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அன்றைய தினம் நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வு, டிசம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பு ;

நடிகரின் அரசியல் பிரச்சாரத்திற்காகப் பள்ளித் தேர்வுகளே ஒத்திவைக்கப்பட்டுள்ள சம்பவம், ஈரோடு மாவட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கூட்டங்களுக்காக கல்வி நிறுவனங்களின் செயல்பாடு பாதிக்கப்படுவது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

தவெக தலைவர் விஜய், கரூர் சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பு பயணத்தைத் தொடங்கி இருக்கும் நிலையில், இந்தப் பிரச்சாரக் கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த அக்கட்சியின் நிர்வாகிகள் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

Leave a Comment