அவர் அவுட் ஆனதை ஏன் கொண்டாடுகிறீர்கள்?.. ரசிகர்களால் வருத்தமடைந்த கிங் கோலி..

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வதோதராவில் நேற்று (ஜனவரி 11, 2026) நடைபெற்ற பரபரப்பான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 301 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், விராட் கோலி தனது அபாரமான ஆட்டத்தால் 93 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

போட்டிக்குப் பின் ‘ஆட்டநாயகன்’ விருது பெற்ற கோலி, மைதானத்தில் ரசிகர்கள் காட்டிய ஒரு குறிப்பிட்ட செயல் தனக்கு மனவருத்தத்தை அளிப்பதாக வெளிப்படையாகப் பேசினார்.

மைதானத்தில் நடந்தது என்ன?
இந்திய அணியின் இன்னிங்ஸைத் தொடங்கிய ரோகித் சர்மா 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், ரோகித் அவுட் ஆனதற்காக வருத்தப்படுவதை விட, அடுத்ததாக ‘கிங் கோலி’ களமிறங்கப் போகிறார் என்பதை ஆவலோடு கொண்டாடினர். மைதானமே அதிரும் வகையில் விசில் சத்தமும் ஆரவாரமும் எழுந்தது.

கோலியின் முதிர்ச்சியான பதில்:
இது குறித்துப் போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் கோலி கூறியதாவது,

“மைதானத்திற்குள் நான் வரும்போது ரசிகர்கள் காட்டும் அந்த அன்பும் உற்சாகமும் எனக்குப் புரிகிறது. ஆனால், உண்மையைச் சொல்லப்போனால் இது எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு வீரர் அவுட் ஆகி வெளியே செல்லும்போது, அடுத்தவர் வருவதை இப்படிப் பெரிய அளவில் கொண்டாடுவது சரியல்ல. இதே விஷயம் தான் தோனி Bhai-க்கும் அடிக்கடி நடக்கிறது”.

”வெளியேறும் வீரர் தனது ஆட்டம் முடிந்துவிட்டதே என்ற சோகத்தில் இருப்பார். அந்த நேரத்தில் ரசிகர்கள் இப்படி ஆர்ப்பரிப்பது அவரை இன்னும் காயப்படுத்தும். ரசிகர்களின் உணர்ச்சிகளை நான் மதிக்கிறேன், அதே சமயம் அவுட் ஆகிச் செல்பவரின் மனநிலையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.”

மற்றொரு மைல்கல்:
இந்த 93 ரன்கள் மூலம் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் மற்றுமொரு சாதனையைப் படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்காராவுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களைக் கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “இப்போது நான் சாதனைகளுக்காக விளையாடுவதில்லை என் விளையாட்டு மூலம் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதையே பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்” என்றார்.

Leave a Comment