2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அதிமுகவை ‘ஊழல் கட்சி’ என விமர்சித்துப் பேசியதற்கு, அதிமுகவின் சி.ஆர்.சரஸ்வதி மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
லாட்டரி பணத்தில் கட்சி நடக்கிறதா?
சி.ஆர்.சரஸ்வதி செய்தியாளர்களிடம் பேசும்போது, “விஜய் ஊழல் பற்றிப் பேசுகிறார். அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். விஜய் அருகில் உட்கார்ந்திருக்கும் ஆதவ் அர்ஜுனாவின் பின்புலம் என்ன? எந்த லாட்டரி சீட்டை ஜெயலலிதா அம்மா தமிழ்நாட்டில் ஒழித்துக் கட்டினாரோ, அந்த லாட்டரி மூலம் லட்சக்கணக்கான ஏழைகளைச் சுரண்டிய பணத்தில்தான் இன்று விஜய்க்கு அரசியல் செலவு செய்யப்பட்டு வருகிறது. எத்தனை குடும்பங்கள் அந்தப் பணத்தால் அழிந்து போயின என்பது தெரியுமா?” என ஆதவ் அர்ஜுனாவைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
ஐடி ரெய்டு மற்றும் அருண்குமார் விவகாரம்:
தொடர்ந்து விஜய்யின் ஆலோசகராக இருக்கும் முன்னாள் ஐடி அதிகாரி அருண்குமார் குறித்துப் பேசிய அவர்,
“விஜய் அருகில் இருக்கும் அருண்குமார் யார்? அவர் அரசியல்வாதியா? விஜய் வருமான வரி கட்டாமல் டிமிக்கி கொடுத்தபோது, தனது அரசு ஊழியர் கடமையைச் செய்யாமல் விஜய்யைக் காப்பாற்றியவர்தான் இந்த அருண்குமார். இப்படிப்பட்டவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழல் பற்றி விஜய் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.”
செங்கோட்டையனுக்கு விழுந்த கண்டனம்:
அதிமுகவில் இருந்து தவெக-விற்குச் சென்ற செங்கோட்டையன், “எம்ஜிஆருக்குப் பிறகு ஒரு பெரிய ஆளுமை என்றால் அது விஜய் தான்” எனக் கூறியதை சி.ஆர்.சரஸ்வதி கடுமையாகச் சாடினார்.
“அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் சொல்கிறார். ஆனால், ஊழல் கட்சி என்று அவர் சொல்லும் அதே அதிமுகவில் இருந்து சென்றவர் தான் செங்கோட்டையன். அங்கிருந்தால் ஊழல்வாதி, இங்கே வந்தால் நல்லவரா?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “எம்ஜிஆருக்குப் பிறகு அம்மா (ஜெயலலிதா) ஒரு ஆளுமையே இல்லையா? ஒரே நாளில் அம்மாவை மறந்துவிட்டு விஜய்யைப் புகழ்ந்து பேசுவதுதான் செங்கோட்டையனின் அரசியலா?” என அவர் ஆவேசமாகப் பேசினார்.
விஜய்யின் ஊழல் விமர்சனத்திற்குப் பதிலடியாக அதிமுக தரப்பு லாட்டரி மற்றும் வருமான வரி விவகாரங்களைக் கையில் எடுத்திருப்பது தவெக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.