தமிழக அரசியல் களத்தில் ‘மாற்று அரசியல்’ பேசும் ஒரு புதிய சக்தியாக தன்னை காட்டிக்கொள்ளும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் கடைப்பிடிக்கும் அணுகுமுறை அரசியல் விமர்சகர்களிடையே கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மற்ற பிரதான கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி வியூகங்களில் தீவிரமாக இருக்கும் நிலையில், விஜய் இன்னும் தனது பனையூர் இல்லத்திலேயே ஆலோசனைகளை நடத்திக்கொண்டு முடங்கியிருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியை கேள்விக்குள்ளாக்குகிறது. ஒரு புதிய கட்சிக்குத் தேர்தல் களம் என்பது அறிமுகமில்லாத போர்க்களம் போன்றது; அங்கு படைவீரர்களான தொண்டர்களை உற்சாகப்படுத்த தளபதி முன்னின்று களப்பணியாற்ற வேண்டும். ஆனால், விஜய் காட்டும் இந்த நிதானம் அல்லது தாமதம், கட்சியின் எதிர்காலத்தை திட்டமிட்டு சிதைக்கிறதோ என்ற அச்சத்தைத் தொண்டர்கள் மத்தியில் விதைத்துள்ளது.
விஜய் சமீபத்தில் நடத்திய இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில், “நாம் யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை, 2026-ல் தனித்தே ஆட்சி அமைப்போம்” என்று பேசியது, அவரது தன்னம்பிக்கையை காட்டினாலும் அது நடைமுறை அரசியலுக்கு எவ்வளவு சாத்தியம் என்ற கேள்வி எழுகிறது. திராவிட கட்சிகள் பல ஆண்டுகளாக கட்டமைத்துள்ள வாக்கு வங்கியை உடைக்க வேண்டுமானால், வெறும் அறிக்கைகள் மட்டும் போதாது; மாறாக, அடிமட்ட தொண்டர்களுடன் இணைந்து தெருக்களில் இறங்கி பணியாற்ற வேண்டும். விஜய் இன்னும் தன்னை ஒரு ‘திரைப்பட நட்சத்திரம்’ என்ற பிம்பத்திற்குள்ளேயே வைத்துக்கொண்டு, முக்கியமான தருணங்களில் மட்டும் தோன்றி பேசுவது, அவர் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை என்பதையே காட்டுகிறது. இந்த ‘சீசனல் அரசியல்’ என்பது தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் நீண்ட காலத்திற்கு எடுபடாது என்பதை அவர் உணர வேண்டிய தருணம் இது.
தமிழக அரசியலில் நிலவும் மற்றொரு முக்கியமான விமர்சனம் என்னவென்றால், விஜய் மாற்றாக வர துடித்தாலும் அவர் செய்யும் பல காரியங்கள் திராவிட கட்சிகளின் நகல்களாகவே உள்ளன. மத நிகழ்வுகளை அரசியலுக்காக பயன்படுத்துவது, மேடைகளில் குறிப்பிட்ட அடையாளங்களை அணிந்துகொண்டு வித்தை காட்டுவது போன்ற திராவிட கட்சிகளின் பழைய உத்திகளையே அவரும் பின்பற்றுகிறார். திராவிட கட்சிகள் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் நான் இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பேன் என்று சொல்வது மாற்றம் ஆகாது, மக்களின் அடிப்படை தேவைகளை சீரமைக்காமல், அரசு வழங்கும் சலுகைகளை உயர்த்தி வழங்குவதாக கூறுவது எப்படி மாற்று அரசியலாகும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான நிதி மேலாண்மை மற்றும் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என்பது ஒரு இமாலயப் பணியாகும். ஒரு கட்சி தலைவராக விஜய் இதற்கான திட்டமிடலை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 234 தொகுதிகளிலும் தகுதியான, ஊழல் கறையற்ற வேட்பாளர்களை கண்டறிவதே ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும்போது, அதற்கான தேடல் இன்னும் முழுமையடையாமல் இருப்பது கட்சியின் பலவீனத்தையே காட்டுகிறது. மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் செலவுகளை யார் கவனிப்பார்கள், நிதி ஆதாரம் எங்கிருந்து வரும் என்பது குறித்த தெளிவின்மை, வேட்பாளராக வர விரும்புபவர்களையே தயங்க செய்கிறது. நிதி பலம் கொண்ட திராவிட கட்சிகளை எதிர்த்து நிற்க வேண்டுமானால், வலுவான ஒரு கட்டமைப்பு அவசியம், அது தற்போதைய நிலையில் தவெகவிடம் இருப்பதாக தெரியவில்லை.
மற்றொரு புறம், விஜய் தனித்து போட்டியிடுவதால் ஏற்படப்போகும் ஓட்டு சிதறல்கள் ஆளும் எதாவது ஒரு திராவிட கட்சிக்கே சாதகமாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்த போதிலும், அவர் காட்டும் பிடிவாதம் அல்லது தெளிவின்மை எதிர்க்கட்சிகளின் வாக்குகளை பிரிப்பதற்கே உதவும். ஒருவேளை விஜய் 2021ல் சீமான் பெற்ற வாக்குகளை விட குறைவாகப் பெற்றால், அது அவரது அரசியல் வாழ்விற்கு ஒரு மிகப்பெரிய முற்றுப்புள்ளியாக மாறிவிடும். தனித்து போட்டியிடுவது என்பது ஒரு துணிச்சலான முடிவுதான், ஆனால் அதற்கு தேவையான களப்பணிகளை ஒரு மாசத்திற்கு முன்னரே முடிக்காமல், இன்னும் பனையூரிலேயே தவம் கிடப்பது தற்கொலைக்கு சமமானது.
இறுதியாக, விஜய்யின் இந்த ‘வெயிட் அண்ட் வாட்ச்’ உத்தி, அவரை நம்பி வந்த தொண்டர்களை சோர்வடையச் செய்துள்ளது. வாக்காளர் பட்டியலை பார்த்து வீடு வீடாக சென்று ஓட்டு கேட்க வேண்டிய மிக முக்கியமான நேரத்தில், தலைமை அமைதி காப்பது கட்சிக்கு எவ்வித நன்மையையும் பயக்காது. அரசியலில் வெற்றி என்பது வெறும் நட்சத்திர அந்தஸ்தால் மட்டும் கிடைப்பதில்லை; அது மக்களின் பிரச்சனைகளுக்காக களத்தில் நின்று போராடுபவர்களுக்கே கிடைக்கிறது. விஜய் தனது திரைப்படப் பாணி ஸ்டண்டுகளை விட்டுவிட்டு, ஒரு உண்மையான மக்கள் தலைவராக தன்னை நிலைநிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையெனில், 2026 தேர்தல் என்பது அவருக்கு ஒரு கசப்பான அனுபவமாகவே முடியும் என்பதில் ஐயமில்லை.