அதிமுகவின் அடுத்த விக்கெட்டை தூக்க போகிறதா திமுக.. அமைச்சர் எ.வ.வேலுவே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்.. ஆனால் நான் அதிமுக விசுவாசி, ஓபிஎஸ் போல் கட்சி மாற மாட்டேன் என முகத்தில் அடித்தால் சொல்லிவிட்ட அதிமுக பிரபலம்.. அவர் யார் தெரியுமா?

தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் நேரத்து கட்சி தாவல்கள் என்பது புதிய ஒன்றல்ல என்றாலும், 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி அரங்கேறி வரும் மாற்றங்கள் அரசியல் நோக்கர்களையே அதிர வைத்துள்ளன. பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட கொள்கை அல்லது தலைமையின் கீழ் பயணித்த மூத்த தலைவர்கள், யாரும் எதிர்பாராத வகையில் மாற்று முகாம்களுக்கு தாவுவது இந்த தேர்தலின் தனிச்சிறப்பாக மாறியுள்ளது. குறிப்பாக, அதிமுகவின் கோட்டைகளாக கருதப்பட்ட தூண்களே சரிந்து விழுவது அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரிசையில் அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட மூத்த தலைவர் செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது முதல் அதிர்ஷ்டவசமாக அமைந்தது. அதை தொடர்ந்து ஓ.பி.எஸ் அணியின் முக்கிய முகங்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் திமுகவில் ஐக்கியமானது அடுத்தடுத்த திருப்பங்களாக அமைந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக அறியப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது தமிழக அரசியலின் உச்சகட்ட ‘கிளைமாக்ஸ்’ நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் முதல் மாவட்ட அளவிலான முக்கியப் புள்ளிகள் வரை பலரும் உதயசூரியன் சின்னத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த சூழலில் தான், அதிமுகவின் மற்றொரு மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை திமுகவில் இணைய போவதாக கசிந்த செய்திகள் சேலம் மண்டல அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பின. சேலம் மாவட்டத்தில் கடந்த முறை இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க துடிக்கும் திமுகவிற்கு, செம்மலை போன்ற ஒரு சீனியர் தலைவரின் வருகை பெரும் பலமாக அமையும் என கணிக்கப்பட்டது.

திமுக தலைமையால் சேலம் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் எ.வ. வேலு, இந்த முறை சேலத்தில் திமுகவின் வெற்றியை உறுதி செய்ய கடுமையாக உழைத்து வருகிறார். கடந்த தேர்தலில் சேலத்தின் 11 தொகுதிகளில் ஒன்றை மட்டுமே திமுக வென்ற நிலையில், இந்த முறை குறைந்தது 10 இடங்களையாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் வேலு உறுதியாக உள்ளார். இதற்காக அதிமுகவின் பலமான வேர்களை கண்டறிந்து, அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வியூகத்தை அவர் முன்னெடுத்து வருகிறார்.

வன்னியர் சமூகத்தை சேர்ந்த செம்மலைக்கு மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார தொகுதிகளில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. அவரை திமுகவிற்கு இழுப்பதன் மூலம் மேட்டூர் மட்டுமல்லாது, அதன் அண்டை தொகுதிகளிலும் வன்னியர் வாக்குகளை எளிதாக அறுவடை செய்யலாம் என்பது திமுகவின் திட்டம். இதற்காக அமைச்சர் எ.வ. வேலு நேரடியாகவே செம்மலையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. செம்மலை திமுகவில் இணைந்தால் மேட்டூர் தொகுதியில் அவரே வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

இருப்பினும், ஓ.பி.எஸ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் திமுகவிற்கு இசைவு தெரிவித்து சென்ற போதிலும், செம்மலை இதுவரை அந்த முடிவை எடுக்கவில்லை என்று தெரிகிறது. ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், அவர் அதிமுகவின் மீதான தனது விசுவாசத்தை கைவிட தயாராக இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் ஐந்து முனை போட்டியில் மூத்த தலைவர்களின் இந்த இழுபறி ஆட்டங்கள், தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Comment